ஆக்கிரமிப்பு தவறுதான்; அது முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது: கபில் சிபல்

ஆக்கிரமிப்பு தவறுதான், ஆனால் அது முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.
ஆக்கிரமிப்பு தவறுதான்; அது முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது: கபில் சிபல்
ஆக்கிரமிப்பு தவறுதான்; அது முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது: கபில் சிபல்


புது தில்லி: ஆக்கிரமிப்பு தவறுதான், ஆனால் அது முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.

தில்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ஆக்கிரமிப்புகள் தவறுதான். ஆனால் இங்கு அது முஸ்லிம் மக்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்றார். 

மேலும், ஒரு சில மாநிலங்களில் ராம நவமி ஊர்வலம் நடத்த வேண்டாம் என்று சொன்னால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். புல்டோசர் வைத்து வீடுகளை இடிப்பார்கள், மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கபில் சிபல் குறிப்பிட்டார்.

நோட்டீஸ் உள்ளிட்ட முன்னறிவிப்புகள் எதுவும் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டபோது, சட்டதிட்டங்களுக்கு உள்பட்டே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஒரு சில நடவடிக்கைகளுக்கு முன்னறிவிப்பு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று வடக்கு தில்லி மாநகராட்சி சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

மேலும், மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களில், தில்லியில் 731 ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதில் லட்சக்கணக்கானோர் வாழ்கிறார்கள். அப்படியிருக்க ஏன் ஒரு சமுதாய மக்களை மட்டும் குறிவைக்கிறார்கள். ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சைனிக் ஃபார்ம்ஸ் இருக்கிறது. கோல்ஃப் லிங்ஸ் இருக்கிறது. ஆனால், அவர்களை எல்லாம் தொடக்கூட முடியாது. ஏழை மக்களைத்தான் குறி வைப்பார்கள் என்று மற்றொரு மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தாவே குறிப்பிட்டார்.

வடக்கு தில்லி மாநகராட்சித் தரப்பில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. அதில், ஒருபகுதியாக ஜஹாங்கீா்புரியிலும் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஜஹாங்கீா்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 9 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனா். தொடர்ந்து, அப்பகுதியை சுற்றிலும் 1,250 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

ஜவாங்கீர்புரி பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கருத்தில் கொண்டு ஒரு தரப்பினரின் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தற்போது இருக்கும் நிலையே அங்கு தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தடையை மேலும் 2 வாரத்துக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com