நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த படுகொலை....போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்க கோரிக்கை

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பின்போது குஜராத்தின் அதிகாரப்பூர்வ ஊர்தி இந்த படுகொலையை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

ஆங்கிலேயர்களின் காலனியாதிக்க காலத்தில், அதாவது கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், இந்த படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

சுரண்டல், தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவது, அதிக வரி விதிப்பு ஆகியவைக்கு எதிராக சமூக சீர்திருத்தவாதியான மோதிலால் தேஜாவத் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பால்-தாத்வாவ் கிராமங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது, பிரிட்டன் ராணுவ தளபதியான சுட்டன், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டார். 

இதில் சிக்கி 1200 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குஜராத் அரசின் ஆவணத்தில், "போர்க்களம் போல் அந்த பகுதி முழுவதும் பிணங்களால் நிரம்பி வழிந்தது. இரண்டு கிணறுகள், உடல்களால் நிரம்பி வழிந்தன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படுகொலையின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் அனுசரிக்கப்பட்டது. 

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பின்போது குஜராத்தின் அதிகாரப்பூர்வ ஊர்தி இந்த படுகொலையை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பழங்குடியினரின் தியாகம் மற்றும் துணிச்சல் பற்றிய சொல்லப்படாத மறைக்கப்பட்ட வரலாறு என ஊர்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கரோனா ஊரடங்கு காலத்தில் கேளிக்கை விருந்துகளை நடத்தி சர்ச்சையில் சிக்கிய போரிஸ் ஜான்சன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக குஜராத் வந்துள்ளார். 

பால்-தாத்வாவ் படுகொலை குறித்து மோதிலால் தேஜாவத்தின் பேரன் மகேந்திர கூறுகையில், "ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த கொலைகள் நடந்ததால், பிரிட்டன் பிரதமர் இங்கு வந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். எனது தாத்தா ஏழை, எளிய மற்றும் படிப்பறிவில்லாத பழங்குடியினருக்காக மட்டுமே சேவை செய்துவந்தார். அற வழியில் போராட்டம் நடத்திய பழங்குடியினருக்கு நடந்தது தவறு என்று அவர் உணர்ந்தால் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com