காங்கிரஸ் கட்சியில் சேர்கிறாரா பிரசாந்த் கிஷோர்...72 மணி நேரத்தில் முடிவு

இந்த வாரத்தில் நான்காவது முறையாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, கே. சி. வேணுகோபால், சோனியா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் தன்னுடைய திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம், கட்சியை எப்படி மறு சீரமைக்கலாம் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்துவருகிறார். 

கிஷோரின் திட்டம் குறித்து மதிப்பீடு செய்யும் குழுவை தவிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதல்வர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இது தொடர்பான அறிக்கை 72 மணி நேரத்தில் வெளியிடப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் நான்காவது முறையாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, கே. சி. வேணுகோபால், சோனியா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "பிரசாந்த் கிஷோரின் திட்டங்கள் குறித்து கட்சி மதிப்பீடு செய்துவருகிறது. பல்வேறு தரப்பினரிடையே உள்ளீடுகள் பெறப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இறுதி அறிக்கை சமர்பிக்கப்படும்" என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸை முழுவதுமாக புதுப்பிக்க கிஷோர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். கூட்டு தமைமையின் மூலம் முடிவுகளை எடுக்க காங்கிரஸ் விரும்பினாலும், இறுதி முடிவை சோனியா காந்தியே எடுப்பார். 

முதலில், கிஷோரின் திட்டத்தை பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. குஜராத்திற்கு மட்டுமே திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறை கூறினர்.

பின்னர், 2024 மக்களவை தேர்தல் மற்றும் கட்சியை முழுவதுமாக சீரமைக்கும் வகையிலான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் விளக்கம் அளித்தது. பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கும் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.

கிஷோரின் செயல்பாடுகள் மூத்த தலைவர்களை பகைத்துவிடுமே என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அச்சம் கொள்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு திட்டம் வகுத்து கொடுக்கும்போதுதான் மம்தாவின் நெருக்கமானவராக கருதப்பட்ட சுவேதந்து அதிகாரி அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com