தினமும் ரூ.19 லட்சம் மோசடி: காவல்துறை பகிர்ந்திருக்கும் பகீர் தகவல்

மோசடியாளர்களின் தந்திரம் மட்டுமே வெற்றிபெறுகிறது. கர்நாடகத்தில் சராசரியாக நாள்தோறும் ரூ.19 லட்சம் ஆன்லைன் முறையில் மோசடி செய்யப்படுகிறது.
தினமும் ரூ.19 லட்சம் மோசடி: காவல்துறை பகிர்ந்திருக்கும் பகீர் தகவல்
தினமும் ரூ.19 லட்சம் மோசடி: காவல்துறை பகிர்ந்திருக்கும் பகீர் தகவல்

பெங்களூரு: நீங்கள் யார்? படித்தவரா? என்பதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. மோசடியாளர்களின் தந்திரம் மட்டுமே வெற்றிபெறுகிறது. கர்நாடகத்தில் சராசரியாக நாள்தோறும் ரூ.19 லட்சம் ஆன்லைன் முறையில் மோசடி செய்யப்படுகிறது.

இந்த தகவல் கர்நாடக காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆயிரக்கணக்கானோருக்கு வந்த குறுந்தகவலில் குறிப்பிட்டத் தொகையை முதலீடு செய்தால், பெரிய தொகை திரும்பக் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அது குறித்து வழக்குப் பதிவு செய்து கர்நாடக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

இதையும் படிக்க.. தனது புதிய விடுதி மீது குண்டுவீசச் சொன்ன உக்ரைன் தொழிலதிபர்: காரணம் நாட்டுப்பற்றுதான்

தும்குரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சமூக வலைத்தளம்மூலம் பழகி வந்த நபர், ரூ.38 லட்சத்தை மோசடி செய்துள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, வங்கியிலிருந்து பேசுவதாகச் சொன்ன நபரிடம் ஓடிபியை பகிர்ந்து ரூ.89 ஆயிரத்தை இழந்தார்.

இப்படி நாள்தோறும் நடக்கும் குற்றச்செயல்களைப் பார்க்கும் போது சைபர்கிரைம் குற்றவாளிகள், கர்நாடகத்தில் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய மனிதர்கள், தனிநபர்கள், சாமானியர்கள், நன்கு படித்தவர்கள், பெரிய பதவியிலிருப்பவர்கள் என யாரும் இங்கே பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. கர்நாடக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம் சொல்வது என்னவென்றால், இதுவரை நடந்த மோசடிகளின் அடிப்படையில், சராசரியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2022 பிப்ரவரி 28 வரை நாள்தோறும் ரூ.19 லட்சத்தை ஆன்லைன் மோசடி மூலம் அப்பாவிகள் இழக்கிறார்கள் அல்லது மோசடி செய்யப்படுகிறது என்பதுவே.

சமூக வலைத்தளம் மூலம் பழகி மோசடி, பண ஆசைக் காட்டி மோசடி மற்றும் ஓடிபி  மோசடி என மூன்று முக்கிய முறைகளில்தான் ஆன்லைன் மோசடிகள் நடக்கின்றன. கடந்த 38 மாதங்களில் மட்டும் அப்பாவிகளை ஏமாற்றி ஆன்லைன் மோசடியாளர்கள் ரூ.221 கோடியை பெற்றுள்ளனர். இதில், காவல்துறையினரால் மீட்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ.47 கோடிதான்.

கர்நாடக பேரவையில் அண்மையில் இந்த புள்ளி விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு இறுதிவரை, இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்களையும் அந்தந்தப் பகுதி காவல்நிலையங்களே விசாரித்து வந்தன. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல்தான், கர்நாடகத்தில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்தவர்கள் 112க்கு இலவச அழைப்பில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக பணத்தை திரும்பப் பெறலாம் என்று காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதேவேளையில், ஒரு மணி நேரத்துக்குப் பிறகு புகார் வரும்பட்சத்தில், பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் பெரிய அளவில் உதவவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com