பாஜக அளித்த புகார்...நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜிக்னேஷ் மேவானி

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவரான அருப் குமார் டே அளித்த புகாரின் பேரில் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிக்னேஷ் மேவானி
ஜிக்னேஷ் மேவானி

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதை ஆட்சேபித்து அசாம் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார் டே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

பலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் நேற்று இரவு 11:30 மணி அளவில் கைது செய்யப்பட்டு அகமதாபாத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அஸ்ஸாமுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இதுகுறித்து கோக்ரஜார் காவல்துறை கண்காணிப்பாளர் துபே பிரதீக் விஜய் குமார் கூறுகையில், "கோக்ரஜார் போலீசார், காங்கிரஸ் வட்கம் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை பலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் இருந்து கைது செய்தனர்" என்றார்.

இரு பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்தல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடம் அவமதித்தல், சதிச் செயல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, அவர் பதிவிட்ட இரண்டு பதிவுகளை சட்டப்பூர்வமான காரணங்களை முன்வைத்து ட்விட்டர் நீக்கியுள்ளது. 

இதுகுறித்து மேவானியின் உதவியாளர் சுரேஷ் ஜாட் கூறுகையில், "அஸ்ஸாம் காவல்துறை அலுவலர்கள் பகிர்ந்துள்ள ஆவணத்தின்படி, சில நாட்களுக்கு முன்பு மேவானியின் ட்வீட் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த ட்வீட்டை ட்விட்டர் நீக்கியுள்ளது. அது நாதுராம் கோட்சேவைப் பற்றியது. மேவானி முதலில் சாலை வழியாக அகமதாபாத்துக்கு அழைத்து வரப்பட்டு, இன்று அதிகாலை விமானம் மூலம் அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com