ஜம்முவில் பாதுகாப்புப் படை- தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: வீரர் ஒருவர் வீர மரணம்

ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜம்மு: ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று, பிரதமர் நரேந்திர மோடி சம்பா மாவட்டத்திற்கு வரஇருப்பதையொட்டி, இரண்டு நாள்களுக்கு முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சுஞ்ச்வானில் பயங்கரவாதிகளுடன் என்கவுன்டர் நடந்து நடந்து வருகிறது.

இதுதொடா்பாக ஜம்மு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் முகேஷ் சிங் கூறுகையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த, குறைந்தபட்சம் இரண்டு கனரக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், பரந்து விரிந்து கிடக்கும் சுஞ்ச்வான் ராணுவ நிலையத்தையொட்டிய பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில்,  அங்கு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும், சிஆர்பிஎஃப் வீரர்களும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து துப்பாக்கிச் சண்டை மூண்டது.

மேலும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்ததாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், பயங்கரவாதிகளுடனான் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக கூறினார். 

அப்பகுதிக்கு மேலும் அதிகயளவில் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளதாகவும், பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018 பிப்ரவரி 10 ஆம் தேதி, ஜெய்ஷ்-இம்-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் சுஞ்ச்வான் ராணுவ முகாமில் நுழைந்தனர், இதையடுத்து அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில், ஆறு வீரர்கள் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் நடைபெறும் சிறப்பு விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஆகஸ்ட் 2019 இல் பிரிக்கப்பட்ட பிறகு, எல்லைகளைத் தவிர மற்ற பகுதிகளுக்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆனால் ஜம்முவில் தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதை அடுத்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

2019 அக்டோபர் 27 ஆம் தேதி ரஜோரியிலும், 2012 நவம்பர் 3 ஆம் தேதி ஜம்மு பிரிவில் உள்ள நவ்ஷேரா செக்டாரிலும் ராணுவ வீரர்களுடன் மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com