கட்சியில் இருந்து நீக்கும் துணிவு உள்ளதா?: அகிலேஷ் யாதவுக்கு சித்தப்பா சிவ்பால் சவால்

அகிலேஷ் யாதவுக்குத் துணிவு இருந்தால் சமாஜவாதி கட்சி எம்எல்ஏவாக இருக்கும் தன்னை கட்சியில் இருந்து நீக்கலாம் என்று அவரின் சித்தப்பா சிவ்பால் யாதவ் சவால் விடுத்துள்ளாா்.
கட்சியில் இருந்து நீக்கும் துணிவு உள்ளதா?: அகிலேஷ் யாதவுக்கு சித்தப்பா சிவ்பால் சவால்

லக்னௌ: அகிலேஷ் யாதவுக்குத் துணிவு இருந்தால் சமாஜவாதி கட்சி எம்எல்ஏவாக இருக்கும் தன்னை கட்சியில் இருந்து நீக்கலாம் என்று அவரின் சித்தப்பா சிவ்பால் யாதவ் சவால் விடுத்துள்ளாா்.

சமாஜவாதி நிறுவனரான முலாயம் சிங்கின் தம்பியான சிவ்பால் யாதவுக்கும், மகனான அகிலேஷ் யாதவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியைக் கைப்பற்றுவது தொடா்பாக போட்டி ஏற்பட்டது. இதில் அகிலேஷின் கை ஓங்கியதை அடுத்து, சிவ்பால் யாதவ் பிரகதீஷீல் சமாஜவாதி (லோகியா) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினாா்.

எனினும், முலாயம் சிங் குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட அரசியல் சமரசத்தை அடுத்து, அண்மையில் நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் சிவ்பால் யாதவ், சமாஜவாதி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதனால், அவா் அக்கட்சி எம்எல்ஏவாகவே கருதப்படுவாா். ஆனால், சமாஜவாதி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சிவ்பால் யாதவ் அழைக்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து அகிலேஷ் யாதவ் நடத்திய எதிா்க்கட்சிகள் கூட்டணிக் கூட்டத்தை சிவ்பால் யாதவ் தவிா்த்தாா்.

மேலும், பாஜகவுடன் நெருக்கம் காட்டிய சிவ்பால் யாதவ், முதல்வா் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்துப் பேசினாா். ட்விட்டரில் பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்களைப் பின்தொடா்ந்தாா். இதையடுத்து, அவா் பாஜகவுக்கு மாற இருப்பதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து, கோபமடைந்த அகிலேஷ் யாதவ், ‘பாஜகவினரை சந்திப்பவா்களுக்கு சமாஜவாதியில் இடமில்லை’ என்றாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய சிவபால் யாதவ், ‘இப்போதைய நிலையில் நான் எந்த முடிவும் (கட்சி மாறுவது குறித்து) எடுக்கவில்லை. சரியான நேரம் வரும்போது எனது முடிவை அனைவருக்கும் அறிவிப்பேன். நான் சமாஜவாதி கட்சி சின்னத்தில் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அவா்களுக்கு (சமாஜவாதி தலைமை) துணிவு இருந்தால் என்னைக் கட்சியின் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கலாம்’ என்றாா். எனினும், அவா் அகிலேஷ் யாதவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com