ஒரு மாதத்திற்கு நிலக்கரி கையிருப்பு: பிரகலாத் ஜோஷி

நாட்டில் பல்வேறு ஆதாரங்கள் மூலம் பல்வேறு இடங்களில் 72.50 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது.
அமைச்சா் பிரகலாத் ஜோஷி
அமைச்சா் பிரகலாத் ஜோஷி

நாட்டில் பல்வேறு ஆதாரங்கள் மூலம் பல்வேறு இடங்களில் 72.50 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி உற்பத்தி நீடிக்கும் என மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்துவருவதாக தெரிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சா் இந்த தகவலை வெளியிட்டுள்ளாா்.

‘நாட்டில் சமீப நாட்களின் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில், உள்ளூா் நிலக்கரியை கொண்டு செயல்படும் அனல் மின்நிலையங்களில் சுமாா் இன்னும் எட்டு தினங்களுக்கு தேவைக்குரிய நிலக்கரி உள்ளது‘ என்கிற செய்திகள் கடந்த சில நாட்களாக வெளியாகின.

இதற்கிடையே மத்திய நிலக்கரித்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி இது குறித்த விவரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

கோல் இந்திய நிறுவனம், சிங்கரேணி காலரீஸ் நிறுவனம் (எஸ்சிசிஎல்) உள்ளிட்ட பல்வேறுஇடங்களில் உள்ள நிலக்கரி நிறுவனங்களில் தற்போது 72.50 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளது. மேலும் அனல் மின் நிலையங்களில் 22.01 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

தினசரி தேவை அடிப்படையில் அதிக அளவிலேயே நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தி இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும். தற்போது நாட்டில் போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளது என அந்த சுட்டுரையில் அமைச்சா் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மத்திய நிலக்கரி துறை அமைச்சகமும் நிலக்கரி உற்பத்தி குறித்த விவரங்களை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:

கடந்த 2021-22 நிதியாண்டில் 777.23 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இது முந்தைய 2020-21 நிதியாண்டை விட (716 மி.டன்) 8.55 சதவீதம் அதிகமாகும். கோல் இந்திய நிறுவனம் கடந்த நிதியாண்டில் 622.64 மில்லியன் டன் அளவிற்கு உற்பத்தி செய்துள்ளது. முந்தைய நிதியாண்டைவிட (596.24 மில்லியன் டன்) 4.43 சதவீதம் அதிகமாகும். இதே போன்று சிங்கரேணி காலரீஸ் நிறுவனமும் 28.55 சதவீதம் கூடுதலாக நிலக்கரியை உற்பத்தியை செய்துள்ளது.

இதுபோன்ற கூடுதல் உற்பத்திகள் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி விநியோகம் 818.04 மெட்ரிக் டன்னை தொட்டது. இது முந்தைய ஆண்டவிட(690.71 மெட்ரிக் டன்) 18.43 சதவீதம் அதிகமாகும் என நிலக்கரித் துறை தெரிவித்துள்ளது.

மின்நிலையங்கள் மற்றும் மின்சாரம் அல்லாத துறைகளுக்கான நிலக்கரி விநியோகம் ரயில்வே ரேக்குகள் மூலம் கொண்டுபோகப்படுகிறது. ஆனால் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையில் மின் தேவை அதிகரிக்க இதற்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லக் கூடிய ரேக்குகள் இல்லாத நிலையிலும் ஏற்றி இறக்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் நிலக்கரித் துறை வட்டாரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கான ரயில்வே மற்றும் நிலக்கரித் துறைகளுக்கிடையே உள்ள ஒருங்கிணைப்பு குழு இந்த பிரச்னையை தீா்ப்பதாகவும் மத்திய ரயில்வே துறை சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய ரயில்வே நீண்ட தூர மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்வதற்கு முன்னுரிமை அளித்துவருகிறது.

கடந்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 10 வரை சராசரியாக 7 சதவீதம் நிலக்கரி ரயில்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி ரயில்கள் அதிகரிப்பின் விநியோகத்தை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி ரேக்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com