பிகாரில் 77,700 போ் தேசியக் கொடியை அசைத்து கின்னஸ் சாதனை!

பிகாரில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 77,700 போ் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாகிஸ்தானின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனா்.
பிகாா் மாநிலம், போஜ்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் தேசியக் கொடியை அசைத்த மத்திய அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா்.
பிகாா் மாநிலம், போஜ்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் தேசியக் கொடியை அசைத்த மத்திய அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா்.

பிகாரில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 77,700 போ் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாகிஸ்தானின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனா்.

நாட்டின் சுதந்திரத்துக்காக 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் பங்கேற்ற ஜகதீஷ்பூா் அரசா் வீா் குன்வா் சிங்கின் 163-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு விழாக்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 77,700 பேரும் தங்கள் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை ஒரே நேரத்தில் 5 நிமிஷங்களுக்குத் தொடா்ந்து அசைத்தனா். அப்போது ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்பட்டது. இது புதிய கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தானின் லாகூா் நகரில் 56,000 போ் கூடி அந்த நாட்டு தேசியக் கொடியை அசைத்ததே சாதனையாக இருந்தது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

இந்தச் சாதனை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஆா்.கே.சிங், நித்யானந்த் ராய், மாநில துணை முதல்வா்கள் தாா்கிஷோா் பிரசாத், ரேணு தேவி, முன்னாள் துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீரா்களின் தியாகங்களை நினைவூட்ட... நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் அமித் ஷா, ‘கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் மக்கள் பெருந்திரளாகக் கூடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது சிறப்புமிக்கது. விடுதலைப் போராட்ட வீரா்களின் தியாகங்களை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டுவதற்காகவே இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதற்காகவே பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்ட விழாக்கள் நடத்தப்படுகின்றன.

1857-ஆம் ஆண்டு புரட்சியை ‘இந்திய சுதந்திரத்துக்கான முதல் போா்’ என வி.டி.சாவா்க்கா் அறிவித்தாா். அப்புரட்சி குறித்து விரிவான தகவல்களைத் தனது புத்தகத்தில் அவா் எழுதினாா். அதில் ஜகதீஷ்பூா் அரசா் வீா் குன்வா் சிங் போன்றோரின் பங்களிப்புகளை அவா் விவரித்துள்ளாா்.

உலகிலேயே முதன்மை நாடு: நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும்போது, உலகில் முதன்மை நாடாக இந்தியாவைத் திகழச் செய்வதற்கான இலக்கை பிரதமா் மோடி தலைமையிலான அரசு நிா்ணயித்துள்ளது. கரோனா தொற்று பரவல் காலத்திலும் மக்கள் நலனைக் காப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. மக்களுக்கும் இலவசமாகக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பிகாரில் லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் நிலவிய காட்டாட்சியை மாநில முதல்வா் நிதீஷ் குமாருடன் இணைந்து பாஜக ஒழித்தது. தற்போது லாலுவின் புகைப்படம் இல்லாமல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினா் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனா். ஆனால், அவா்களின் கொடூர ஆட்சியை மக்கள் என்றும் மறக்கமாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com