ஹைதராபாத் கோயிலில் பெண் கொலை: காட்டிக் கொடுத்த காலணி

கோயிலுக்குச் சென்ற பெண் பக்தர், காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில், காவலர்கள் சாமத்தியமாக விசாரணை நடத்தி பெண்ணைக் கொலை செய்த கோயில் பூசாரியைக் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் கோயிலில் பெண் கொலை: காட்டிக் கொடுத்த காலணி
ஹைதராபாத் கோயிலில் பெண் கொலை: காட்டிக் கொடுத்த காலணி

ஹைதராபாத்: கோயிலுக்குச் சென்ற பெண் பக்தர், காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில், காவலர்கள் சாமத்தியமாக விசாரணை நடத்தி பெண்ணைக் கொலை செய்த கோயில் பூசாரியைக் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தின் மல்காஜ்கிரி பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு வந்த பெண்ணை, இரும்புக் கம்பியால் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்ததாக, கோயில் பூசாரியை வெள்ளிக்கிழமை மாலை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

56 வயது உமா தேவி, ஏப்ரல் 18ஆம் தேதி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், காவலர்கள் சாமர்த்தியமாக துப்புத் துலக்கி, பூசாரி அனுமுலா முரளியை கைது செய்ததன் மூலம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

உமா தேவி, வழக்கமாக இந்த கோயிலுக்கு வந்து செல்வார். இந்த நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதி கோயிலுக்கு வந்தவர், வீடு திரும்பவில்லை. மனைவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் மூர்த்தி கோயிலுக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு பூசாரியிடம் கேட்டபோது, உமா தேவி கோயிலுக்கு வந்து சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

அப்போதுதான், கோயிலின் வாசலில் மனைவியின் காலணி இருப்பதைப் பார்த்து, உமாதேவி அருகில்தான் எங்கேனும் சென்றிருக்க வேண்டும் என்று நினைத்து அங்கேயே காத்திருந்தார். ஆனால் மனைவி வராததால் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி கோயிலுக்கு அருகே உமா தேவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் 42 வயதான கோயில் பூசாரி கைது செய்யப்பட்டார். பூசாரி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளாக இந்தக் கோயிலில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கமாக கோயிலுக்கு வரும் உமா தேவி அணிந்திருக்கும் நகைகள் மீது பூசாரியின் பார்வை விழுந்துள்ளது. உமா தேவியைக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 18ஆம் தேதி உமா தேவி கோயிலுக்கு வந்த போது, யாரும் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டார் பூசாரி. உமா தேவியை இரும்புக் கம்பியால் பல முறை தாக்கி கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். அவர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு, அவரை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடிவைத்துள்ளார்.

பிறகு கோயிலைக் கழுவி சுத்தம் செய்துவிட்டு வழக்கம் போல வேலைகளை செய்திருக்கிறார். கோயிலை மூடிய பிறகு, உமா தேவியின் உடலிலிருந்து நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

அதேப் பகுதியில் உள்ள நகைக்கடையில், அந்த தங்க நகைகள் அவர் விற்று பணமாக்கியுள்ளார். மக்கள் நடமாட்டம் குறைந்த பிறகு, உடலை வெளியேற்ற நினைத்திருந்த பூசாரிக்கு, காவலர்களும், ஊர் மக்களும் உமா தேவியை தேடி வந்ததால் வாய்ப்பு சாதகமாக அமையவில்லை.

இரண்டு நாள்களுக்குப் பிறகு பிளாஸ்டிக் டிரம்மிலிருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியதால், அதனை தூக்கிக் கொண்டுச் சென்று ரயில் தண்டவாளம் அருகே குப்பைமேட்டில் வீசியுள்ளார்.

டிரம்மை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து சுத்தம் செய்து கோயிலுக்குள் வைத்துள்ளார். அப்போதும் அதிலிருந்து துர்நாற்றம் வந்து கொண்டே இருந்ததால் மீண்டும் மீண்டும் சுத்தம் செய்திருக்கிறார். இறுதியில் உடலை காவல்துறையினர் கண்டெடுத்ததும் குற்றத்தின் பின்னணியை காவலர்கள் விரைந்து கண்டுபிடித்துவிட்டனர்.

இந்த சம்பவத்தில், உமா தேவியின் காலணி கோயில் வாசலில் இருந்ததால், அவருக்கு கோயிலுக்குள்தான் ஏதோ நடந்திருக்கிறது என்பது எளிதாகக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com