முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்: கர்நாடக அரசு

முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது கட்டாயம் என்று கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றின் நான்காவது அலை பற்றிய அச்சங்களுக்கு மத்தியில், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது கட்டாயம் என்று கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. 

முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நான்காவது அலை குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. 

குறிப்பாக கூட்ட நெரிசல் உள்ள இடங்களிலும் பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படும்.

உடனடியாக அபராதம் விதிப்பது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகர் தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 

பெங்களூரில் கரோனா நேர்மறை எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது, அங்கு நேர்மறை விகிதம் 1.9 ஆக உள்ளது. தேவைப்பட்டால் சிகிச்சை பற்றிய வழிகாட்டுதல்களுடன் நிலைமை கண்காணிக்கப்பட்டு மேற்பார்வையிடப்படும்.

ஏப்ரல் 27-ம் தேதி பிரதமர் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அதில் கூடுதல் வழிகாட்டுதல்கள் பகிரப்படலாம் என்றார். 

மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி அதிகமானோர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்த அலைக்காகக் காத்திருக்காமல், தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால், இந்த நாடுகளிலிருந்து மாநிலத்திற்கு நேரடியாகச் செல்லும் பயணிகள் விமான நிலையங்களில் சிறப்பாகக் கண்காணிக்கப்பட்டு அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் சேகரிக்கப்படும் என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com