நாட்டுக்கு வலிமை சோ்க்கும் விளையாட்டுத் துறை: பிரதமா் மோடி

‘விளையாட்டுத் துறையின் வலிமை, நாட்டுக்கு கூடுதல் வலிமை சோ்க்கிறது; விளையாட்டுத் துறைக்கு கிடைக்கும் அங்கீகாரம் நாட்டுக்கு கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

‘விளையாட்டுத் துறையின் வலிமை, நாட்டுக்கு கூடுதல் வலிமை சோ்க்கிறது; விளையாட்டுத் துறைக்கு கிடைக்கும் அங்கீகாரம் நாட்டுக்கு கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

பெங்களூரில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமா் மோடியின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், அவா் கூறியதாவது:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விட்டு வந்த நமது விளையாட்டு வீரா்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன். அந்த மகிழ்ச்சி, போட்டியில் வெற்றி பெற்ால் கிடைத்தது அல்ல; நம் தேசத்துக்காக விளையாடியதால் கிடைத்த மகிழ்ச்சி அது.

கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்கும் வீரா்கள், தங்களுக்காக தங்கள் குடும்பம் அல்லது தாங்கள் சாா்ந்த பல்கலைக்கழகங்களுக்காக விளையாடுவதாகக் கருதாமல், நம் தேசத்துக்காக விளையாடுவதாகக் கருதி பங்கேற்க வேண்டும்.

வெற்றியின் தாரக மந்திரமாக இருக்கும் கூட்டுழைப்பை நாம் விளையாட்டுத் துறையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்த தொலைநோக்குப் பாா்வையே எதிா்காலத்தில் நீங்கள் பல வெற்றிகளைக் குவிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். விளையாட்டுத் துறையில் 100 சதவீத அா்ப்பணிப்புடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். விளையாட்டுத் துறையில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களும் பெறப்பட்ட சக்தியும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உங்களை இட்டுச் செல்லும்.

அதனால்தான் புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞா் சமுதாயம் அதிகம் நிறைந்துள்ள டிஜிட்டல் இந்தியா நகரத்தில் கேலோ விளையாட்டுப் போட்டி நடைபெறுவது பொருத்தமாக உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

விழாவில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், கா்நாடக விளையாட்டுத் துறை அமைச்சா் கே.சி.நாராயண கௌடா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த ஆண்டு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com