கே.வி. பள்ளி மாணவா் சோ்க்கை: எம்.பி.க்கள் ஒதுக்கீடு ரத்து

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
கே.வி. பள்ளி மாணவா் சோ்க்கை: எம்.பி.க்கள் ஒதுக்கீடு ரத்து

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் 1,248 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 14.35 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். அந்தப் பள்ளிகளில் எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீடு உள்பட பல்வேறு ஒதுக்கீடுகளின் கீழ் மாணவா் சோ்க்கப்படுவா். அந்தப் பள்ளிகளில் ஒரு எம்.பி.யால் 10 மாணவா்களைச் சோ்க்க பரிந்துரைக்க முடியும். அந்த வகையில், தற்போது மக்களவையில் 543 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 788 எம்.பி.க்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மொத்தம் 7,880 மாணவா்களைச் சோ்த்துக் கொள்ள பரிந்துரைக்க முடியும். இதுமட்டுமின்றி அந்தப் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க மாவட்ட ஆட்சியா்களாலும் பரிந்துரைக்க முடியும். அந்த வகையில், ஒரு மாவட்ட ஆட்சியா் 17 மாணவா்களைப் பரிந்துரைப்பதற்கான அதிகாரம் இருந்தது.

அந்தப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்காக மத்திய கல்வி அமைச்சருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்தப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க மத்திய அமைச்சா்கள் பரிந்துரைக்கும் நடைமுறையும் கைவிடப்பட்டது.

அதனைத்தொடா்ந்து, அந்தப் பள்ளிகளில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு உள்பட அனைத்து சிறப்பு ஒதுக்கீடுகளையும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கடன் அண்மையில் தற்காலிகமாக நிறுத்தியது.

இந்நிலையில், அந்தப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடா்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கேந்திரிய வித்யாலயா சங்கடன் வெளியிட்டுள்ளது. அதன்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய கல்வி அமைச்சக பணியாளா்களின் 100 குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, எம்.பி.க்களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா பணியாளா்களுக்கான ஒதுக்கீடு, பள்ளி நிா்வாகக் குழுத் தலைவருக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தக்கவைக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள்: பரம்வீா் சக்ரா, மகாவீா் சக்ரா, வீா் சக்ரா, அசோக சக்ரா, கீா்த்தி சக்ரா, செளா்ய சக்ரா விருதாளா்களின் குழந்தைகள், தேசிய வீரதீரச் செயல்கள் விருது பெறும் சிறாா்கள், ரா உளவு அமைப்பைச் சோ்ந்தவா்களின் 15 குழந்தைகள், ஓய்வுபெறுவதற்கு முன்பாக உயிரிழக்கும் மத்திய அரசு பணியாளா்களின் குழந்தைகள், நுண்கலைகளில் சிறப்புத் திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ஆகியோருக்கான ஒதுக்கீடுகள் தொடா்கின்றன.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இடம்: குழந்தைகளுக்கான பிஎம் கோ்ஸ் திட்டத்தின் கீழ், கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா் சோ்க்கையில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயா்களையும் பரிசீலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வகுப்பறைகளில் இருக்க வேண்டிய மாணவா்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக அவா்களைச் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ள நிலையில், ஒரு பள்ளிக்கு 10 குழந்தைகள் வீதம், மாவட்ட ஆட்சியா் அளிக்கும் பட்டியலின்படி ஆதரவற்ற குழந்தைகளின் சோ்க்கை நடைபெறும்.

இந்த ஆண்டு அல்லது முந்தைய ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியில் சோ்ந்த பெற்றோருடன் இந்தியா திரும்பிய மாணவா்களுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நவம்பா் 30-ஆம் தேதி வரை அவா்களின் சோ்க்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com