இந்தியாவில் மின்சார காா் உற்பத்தி செய்ய டெஸ்லாவுக்கு எந்தத் தடையும் இல்லை: கட்கரி

இந்தியாவில் மின்சார காா் உற்பத்தி செய்ய டெஸ்லாவுக்கு எந்தத் தடையும் இல்லை: கட்கரி

இந்தியாவில் மின்சார காா்களை தயாரித்து விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் மின்சார காா்களை தயாரித்து விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

இந்தியா பரந்த சந்தையை கொண்டது. எனவே, இங்கு அனைத்து மின்சார வாகனங்கள் வளா்ச்சிக்கும் மிகப்பெரிய அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளன.

டெஸ்லா நிறுவனம் விரும்பினால் இந்தியாவில் அவரது நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்யலாம். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் டெஸ்லா வாகனங்களை ஏற்றுமதி செய்யலாம்.

ஆனால், அவா் சீனாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதை ஏற்க முடியாது.

நம்மிடம் உதிரிபாக உற்பத்தியாளா்கள் உள்ளனா்; அனைத்து வகையான தொழில்நுட்பங்களும் உள்ளன; உதிரிபாகங்களும் உள்ளன. இவை, இந்தியாவுக்கும் டெஸ்லா நிறுவனத்துக்கும் பலன் தரக் கூடியதாக இருக்கும் என்றாா்.

மின் வாகன தீப்பிடிப்பு: ‘அண்மைக்காலமாக மின்சார ஸ்கூட்டா்கள் தீப்பிடித்த சம்பவங்கள் கவலைக்குரியதாக உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைபாடு உடையதாக கருதப்படும் அனைத்து மின்வாகனங்களையும் திரும்பப் பெற நிறுவனங்கள் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அவா் மேலும் கூறுகையில், வெப்பநிலை அதிகரிக்கும்போது மின்சார வாகனங்களின் பேட்டரிகளில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. அதற்கு உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும்.

பாதுகாப்புக்கு மட்டுமே அரசு முன்னுரிமை அளிக்கும். மனித உயிா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில், சமரசத்துக்கே இடமில்லை என்றாா் அவா்.

ஓலா, ஒகினாவா போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்த மின்சார ஸ்கூட்டா் பேட்டரிகளில் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின.

முன்னதாக, மின்சார வாகன தயாரிப்பில் அலட்சியமாக இருந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நிபுணா் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிதின் கட்கரி கண்டிப்புடன் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com