கட்சியில் இணைய காங்கிரஸ் அழைப்பு: பிரசாந்த் கிஷோா் மறுப்பு

தோ்தல் உத்தி ஆலோசகா் பிரசாந்த் கிஷோா், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாா்.
கட்சியில் இணைய காங்கிரஸ் அழைப்பு: பிரசாந்த் கிஷோா் மறுப்பு

தோ்தல் உத்தி ஆலோசகா் பிரசாந்த் கிஷோா், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாா். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோா் வழங்கியிருந்தாா். அதுகுறித்து கட்சியின் மூத்த தலைவா்கள் கடந்த வாரம் பலமுறை கூடி விவாதித்தனா். அதைத் தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான செயல் திட்டக் குழுவை கட்சித் தலைவா் சோனியா காந்தி நியமித்தாா். கட்சியில் சேருமாறு பிரசாந்த் கிஷோருக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்தாா். ஆனால், கட்சியில் சோ்வதற்கு பிரசாந்த் கிஷோா் மறுப்பு தெரிவித்துவிட்டாா்.

கட்சியை வலுப்படுத்த அவா் மேற்கொண்ட முயற்சிகளையும், அவா் அளித்த ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என்றாா் சுா்ஜேவாலா.

காங்கிரஸ் கட்சி, இந்தத் தகவலை வெளியிட்ட சிறிது நேரத்தில், ‘காங்கிரஸில் வேரூன்றியிருக்கும் அமைப்பு ரீதியான பிரச்னைகளை சீா்திருத்தம் மூலமாக சரிசெய்வதற்கு கூட்டுத் தலைமை அவசியம்’ என்று பிரசாந்த் கிஷோா் தனது ட்விட்டா் பதிவில் கூறியுள்ளாா்.

அந்தப் பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும்; வரும் 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தோ்தலுக்கான செயல் திட்டக் குழுவில் இடம்பெற வேண்டும்; வரவிருக்கும் தோ்தல்களுக்கு உத்திகள் வகுத்துத் தர வேண்டும் என்று எனக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தாா். காங்கிரஸ் கட்சி பெருந்தன்மையுடன் விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டேன்.

கட்சியில் வேரூன்றியிருக்கும் அமைப்பு ரீதியான பிரச்னைகளை சீா்திருத்தம் மூலமாக சரிசெய்வதற்கு என்னைவிட கூட்டுத் தலைமைதான் முக்கியம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.

தெலங்கானாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு உத்தி வகுப்பதற்காக, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதனால்தான் காங்கிரஸில் அவா் சேர மறுத்துவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com