எரிபொருள் மீது விதிக்கப்படும் வரி: மோடியின் விமர்சனமும் மாநிலங்களின் பதிலடியும்

பொது மக்களுக்கு உதவும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டல் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் வரியை குறைத்து அதன் ஒட்டுமொத்த விலையை குறைக்க மாநிலங்கள் முன்வரவில்லை என பிரதமர் மோடி நேற்று முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சி முதல்வர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று குற்றம்சாட்டினார். கரோனா நிலைமை குறித்து மாநில முதல்வர்களுடான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, "இது நியாயமற்றது. பொது மக்களுக்கு உதவும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டல் வரியை குறைக்க வேண்டும். 

கடந்த நவம்பர் மாதம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து, மதிப்பு கூட்டல் வரியை குறைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை மகாராஷ்டிரம், மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய ஏற்கபடவில்லை" என்றார்.

இதை கடுமையாக சாடியுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரகேகர ராவ், "வரியை குறைக்க வேண்டும் என மாநிலங்களை கேட்பதற்கு பிரதமர் வெட்கப்பட வேண்டும். மாநிலங்களை கேட்பதற்கு பதில் ஏன் மத்திய அரசு வரியை குறைக்கக் கூடாது. மத்திய அரசு வரியை மட்டும் விதிக்கவில்லை. செஸ் வரி போன்றவற்றையும் பெறுகின்றன. உங்களுக்கு துணிவு இருந்தால், கூடுதல் வரி குறித்து விளக்கம் தாருங்கள்" என்றார்.

மோடியை வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, "பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மேற்குவங்க அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் உரை முழுவதும் தவறாக வழிநடத்துகிறது. ஒரு சாரரின் தரப்பை மட்டுமே எடுத்துரைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்துள்ளோம். இதற்காக, 1500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

மத்திய அரசு எங்களுக்கு தர வேண்டிய தொகை 97,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. அந்த நிலுவை தொகை பெறும் அடுத்த நாளே, பெட்ரோல் மற்றும் டீசலுக்காக 3,000 கோடியை மானியத்தை தருவோம். மானியம் தருவதில் எனக்கு பிரச்னை இல்லை, ஆனால், அரசை எப்படி நடத்துவது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்களால் பேச முடியவில்லை என்றும் எனவே, பிரசமரின் குற்றச்சாட்டுக்கு அங்கு பதிலடி அளிக்க முடியவில்லை என்றும் மமதா விளக்கம் அளித்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, "எரிபொருள் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க முடியாது. இன்று, மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில், மத்திய அரசுக்கு 24.38 ரூபாய் செல்கிறது. மாநிலத்திற்கு 22.37 செல்கிறது. பெட்ரோல் விலையில், 31.58 ரூபாய் மத்திய வரியாகவும், 32.55 ரூபாய் மாநில வரியாகவும் உள்ளது. எனவே, மாநில அரசுகளால் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகிவிட்டது என்பது உண்மையல்ல" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com