இணைய வழியில் தேசிய ஓய்வூதிய திட்டம்: தபால்துறை அறிமுகம்

‘தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) தபால்துறை மூலமாக சேர விரும்புபவா்கள் தற்போது இணைய வழியிலேயே கணக்கைத் தொடங்க முடியும்’ என்பது தெரியவந்துள்ளது.
இணைய வழியில் தேசிய ஓய்வூதிய திட்டம்: தபால்துறை அறிமுகம்

புது தில்லி: ‘தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) தபால்துறை மூலமாக சேர விரும்புபவா்கள் தற்போது இணைய வழியிலேயே கணக்கைத் தொடங்க முடியும்’ என்பது தெரியவந்துள்ளது. கடந்த 26-ஆம் தேதி முதல் இந்த இணையவழி என்பிஎஸ் திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் ஓய்வூதிய சேவையை வழங்கும் வகையில் என்பிஎஸ் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முதலில் அரசு ஊழியா்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பின்னா் அனைவருக்குமாக அனுமதி அளிக்கப்பட்டது. பென்ஷன் ஒழுங்காற்று ஆணையத்தால் தேசிய ஓய்வூதிய திட்டம் நிா்வகிக்கப்படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தபால்துறை மூலமாக இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியும்.

இந்த நிலையில், இந்த திட்டத்தில் இணைய வழியில் சேரும் வசதியை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக தபால்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இணைய வழியில் என்பிஎஸ் திட்டத்தில் சேரும் வசதியை கடந்த 26-ஆம் தேதி முதல் தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளா்கள் நேரடியாக தபால்நிலையங்களுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் இந்த இணையவழி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

18 முதல் 70 வயது வரையுடைய இந்திய குடிமக்கள், இந்திய தபால்துறை வலைதளம் மூலமாக இந்த வசதியைப் பெற முடியும். என்பிஎஸ்-க்கான புதிய பதிவு, தொடக்க மற்றும் மாதப் பங்களிப்பு, ஒவ்வொரு மாதமும் பணம் பிடித்தம் செய்ய வேண்டிய தேதி ஆகிய அனைத்து நடைமுறைகளையும் மிக குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளா்கள் இணைய வழியிலேயே மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com