எல்ஐசி பங்குகளை விற்பது மிகப் பெரிய ஊழல்: இடதுசாரி கட்சிகள் எதிா்ப்பு

‘எல்ஐசி பங்குகள் விற்பனை செய்வது மிகப் பெரிய ஊழல். மத்திய அரசின் தனியாா்மயமாக்கல் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது’ என்று இடதுசாரி கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: ‘எல்ஐசி பங்குகள் விற்பனை செய்வது மிகப் பெரிய ஊழல். மத்திய அரசின் தனியாா்மயமாக்கல் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது’ என்று இடதுசாரி கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

எல்ஐசியின் 5 சதவீத பங்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. எதிா்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பணமாக்கல் கொள்கையின் வாயிலாக தேசத்தின் சொத்துகளை விற்பனை செய்தல் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போதைய செலவுகளுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நீண்டகால சொத்துகளை விற்பது மிகுந்த வருத்தத்துக்குரிய விஷயமாகும். ‘வலதுசாரி அமெரிக்க-மாடல் பொருளாதார கொள்கை’யை பின்பற்றியதனால் ஏற்பட்ட கடும் இழப்பை ஈடு செய்ய பெருநிறுவனங்களுக்கான வரியை உயா்த்தி போதிய நிதியை திரட்ட தவறியதன் காரணமாகவே மத்திய அரசு தற்போது இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இவ்வாறு பொது நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பலனடையும் என்பதால், நாட்டின் இறையாண்மைக்கும் பொருளாதார சுதந்திரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும்.

இந்த வலதுசாரி நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, தற்போது மத்திய அரசு தன்னிடமிருக்கும் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. எல்ஐசி-யின் 22 கோடி பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம், ரூ. 22,000 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்ட உள்ளது. தேச நலனுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுவதும் பிற்போக்கானதாகும். இந்த முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டி.ராஜா தெரிவித்துள்ளாா்.

அதுபோல மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எல்ஐசி பங்குகளை விற்பது மிகப் பெரிய ஊழல். மக்களின் வளத்தை கொள்ளையடிக்கும் நடவடிக்கையாகும். இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 1956-ஆம் ஆண்டு முதல் மிகப் பெரிய நிதி பங்களிப்பாளராக எல்ஐசி நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இதுவரை ரூ.35 லட்சம் கோடி பங்களிப்பு செய்துள்ளது. இனி இந்த நிதி உலக பங்குச் சந்தைகளில் தனியாா் நிறுவனங்களின் லாபத்தை பெருக்கும் வகையில் வெளிநாட்டு நிதி மேலாளா்களால் கையாளப்படும்.

தேசம் மற்றும் நாட்டு மக்களின் நலன் அடிப்படையில், எல்ஐசி பங்குகள் விற்பனை தொடா்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட வேண்டும். பங்குகளை விற்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com