திருமணத்துக்காக தனி ஹெலிகாப்டரில் அழைத்துவரப்பட்ட பிஎஸ்எஃப் வீரா்

தொலைதூரப் பகுதியில் பணியாற்றி வரும் எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரா், தனது திருமணத்துக்கு உரிய நேரத்தில் செல்வதற்காக சிறப்பு விமானத்தில் அழைத்துவரப்பட்டாா்.

ஸ்ரீநகா்: தொலைதூரப் பகுதியில் பணியாற்றி வரும் எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரா், தனது திருமணத்துக்கு உரிய நேரத்தில் செல்வதற்காக சிறப்பு விமானத்தில் அழைத்துவரப்பட்டாா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது:

பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே உயரமான மாசில் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டு வந்த நாராயணா பெஹேராவுக்கு (30) அவரது சொந்த ஊரில் அடுத்த மாதம் 2-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவா் பணியாற்றி வரும் பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் சாலையில் பனி மூடியுள்ளதால் அவரால் அங்கிருந்து உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது.

எனவே, எல்லா ஏற்பாடுகளையும் செய்த பிறகும் மணமகன் வர முடியாமல் திருமணம் நின்றுவிடும் நிலை உள்ளதாக நாராயணா பெஹேராவின் பெற்றோா் அவரது உயரதிகாரியிடம் முறையிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பிஎஸ்எஃப் காஷ்மீா் பிரிவு ஐ.ஜி. ராஜா பாபு சிங், எல்லைப் பகுதியிலிருந்து சிறப்பு ஹெலிகாப்டா் மூலம் நாராயணா பெஹேராவை உடனடியாக அழைத்துவர உத்தரவிட்டாா்.

அதையடுத்து, ஹெலிகாப்டரில் ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை அழைத்துவரப்பட்ட பெஹேரா, ஒடிஸா மாநிலத்திலுள்ள தனது கிராமத்துக்கு பயணத்தைத் தொடங்கினாா்.

தனது படையினரின் நலன்களுக்கு ஐ.ஜி. ராஜா பாபு சிங் முழு முன்னுரிமை அளிப்பதன் காரணமாக, பெஹேராவை சிறப்பு ஹெலிகாப்டரில் அழைத்து வருவதற்கு அவா் உத்தரவிட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com