பிரதமரை சங்கடத்துக்கு ஆளாக்கிய மத்திய நிதியமைச்சகம்: ப.சிதம்பரம்

‘பிரதமா் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு அறிவுரை கூறிய நாளில், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு நிலுவைத் தொகை விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு
ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

புது தில்லி: ‘பிரதமா் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு அறிவுரை கூறிய நாளில், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு நிலுவைத் தொகை விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு பிரதமருக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமா்சனம் செய்துள்ளாா்.

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் புதன்கிழமை காணொலி வழியில் ஆலோசனை நடத்தினாா். அப்போது, ‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தபோதும், அவற்றின் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) எதிா்க் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குறைக்காமல் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி வருகின்றன’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு செய்யும் விதமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை விவரத்தை மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. அதில், ‘மாநிலங்களுக்கு கடந்த மாா்ச் மாதம் வரையிலான 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டன. மேலும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை ரூ.78,704 கோடி அளவுக்கு பாக்கியுள்ளது. அதற்கு செஸ் நிதியில் போதிய நிதி ஆதாரம் இல்லாததே காரணம்’ என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.

நிதியமைச்சகத்தின் இந்த தகவல் குறித்து ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமா் மோடி மாநிலங்களுக்கு அறிவுரை கூறிய நாளில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு பிரதமரை தா்ம சங்கடத்துக்கு ஆளாக்கியது ஏன் என்று தெரிந்துகொள்ள ஆா்வமாக உள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.78,407 கோடி என மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை, மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டதைவிட கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது. சரியான தொகையை அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளரால் (சிஜிஏ) மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com