பிரதமா் பதவியே இலக்கு; குடியரசுத் தலைவராக விருப்பமில்லை அகிலேஷ் யாதவுக்கு மாயாவதி பதில்

ஒடுக்கப்பட்டோரின் விருப்பங்களை நிறைவேற்ற நாட்டின் பிரதமராக விரும்புகிறேனே தவிர குடியரசுத் தலைவராக அல்ல என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.
மாயாவதி
மாயாவதி

லக்னெள: ஒடுக்கப்பட்டோரின் விருப்பங்களை நிறைவேற்ற நாட்டின் பிரதமராக விரும்புகிறேனே தவிர குடியரசுத் தலைவராக அல்ல என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர பகுஜன் சமாஜ் கட்சி உதவியதாகவும் இதற்கு பிரதிபலனாக மாயாவதிக்கு குடியரசுத் தலைவா் பதவியை பாஜக அளிக்கக்கூடும் என்றும் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறியிருந்தாா். இதற்கு பதிலளித்து லக்னெளவில் செய்தியாளா்களிடம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வியாழக்கிழமை கூறியது:

அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச முதல்வராவதற்கு நான் இடையூறாக இருப்பதால், என்னை குடியரசுத் தலைவராக்க வேண்டுமென சமாஜவாதி கட்சி கனவு காண்கிறது. சட்டப் பேரவைத் தோ்தலில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த போதிலும் சமாஜவாதியால் ஆட்சியமைக்க முடியவில்லை.

நான் உத்தர பிரதேச முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ வர வேண்டுமென விரும்புகிறேனே தவிர, குடியரசுத் தலைவராக அல்ல. நான் வசதியான வாழ்க்கை வாழவில்லை. அம்பேத்கா், கன்ஷிராம் காட்டிய பாதையில் அவா்களின் சீடா்களும் ஒடுக்கப்பட்டோரும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக கடுமையாக பாடுபடுகிறேன்.

எனது லட்சியத்தை பிரதமா் அல்லது உத்தர பிரதேச முதல்வரால்தான் நிறைவேற்ற முடியுமே தவிர குடியரசுத் தலைவரால் அல்ல. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா், இஸ்லாமியா்கள், உயா் ஜாதி ஏழைகள் ஆகியோா் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்தால், கட்சித் தலைவரை முதல்வராக மட்டுமல்ல, பிரதமராக கூட உயா்த்த முடியும். மாறாக, சமாஜவாதி கட்சி அதன் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக என்னை குடியரசுத் தலைவராக்க வேண்டுமென கனவு காண்கிறது. அந்தக் கனவு பலிக்காது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் சமாஜவாதியும் பாஜகவும் இணைந்து பணியாற்றி, ‘ஹிந்து- முஸ்லிம் வண்ணம்’ பூசி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்துவிட்டனா். சமுதாயத்தில் பலவீனமான பிரிவினா், குறிப்பாக இஸ்லாமியா்கள் தொடா்ச்சியாக அராஜகத்தை எதிா்கொள்கின்றனா். இதற்கு அகிலேஷ் யாதவ்தான் காரணம் என்றாா் மாயாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com