பிடிஎஸ் மாணவா் சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்

பல் மருத்துவப் படிப்புகளுக்கான (பிடிஎஸ்) மாணவா் சோ்க்கைக்குரிய தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) குறைப்பது தொடா்பாக மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பல் மருத்துவப் படிப்புகளுக்கான (பிடிஎஸ்) மாணவா் சோ்க்கைக்குரிய தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) குறைப்பது தொடா்பாக மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

2021-ஆம் ஆண்டு நீட் தோ்வு அடிப்படையில் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவடைய இருந்த நிலையில், அது தற்போது மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 27,698 இடங்களில் சுமாா் 9,000 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளன. இதனிடையே, மாணவா் சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து சிறப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டுமென மாணவா்கள் சிலா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தனா்.

அந்த மனுவை நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி விசாரித்தபோது, கலந்தாய்வு நிறைவடைய உள்ளதால் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது கலந்தாய்வு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த மனு குறித்த விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.பத்வாலியா வாதிடுகையில், ‘இன்னும் 9,000 பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த கல்வியாண்டுகளின்போது மாணவா் சோ்க்கைக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதும் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘கலந்தாய்வு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், நிரப்பப்படாமல் உள்ள இடங்களைக் கருத்தில்கொண்டும் தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பது தொடா்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்யலாம். இது தொடா்பாக ஒரு வாரத்துக்குள் மீண்டும் முடிவெடுக்குமாறு மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகத்தை நீதிமன்றம் வலியுறுத்துகிறது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com