இந்திய மாணவா்கள் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதி: சீன அரசு முடிவு

சீனாவில் கல்வியைத் தொடர விசாவுக்காக 22 ஆயிரம் இந்திய மாணவா்கள் காத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்திய மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இந்திய மாணவா்கள் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதி: சீன அரசு முடிவு

புது தில்லி: சீனாவில் கல்வியைத் தொடர விசாவுக்காக 22 ஆயிரம் இந்திய மாணவா்கள் காத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்திய மாணவர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கரோனா தொற்று பரவியதைத் தொடா்ந்து, சீனாவில் படித்து வந்த இந்திய மாணவா்கள் தாயகம் திரும்பினா். அவா்கள் மீண்டும் சீனா திரும்புவதற்கான அனுமதியை அந்நாடு இன்னும் வழங்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலேயே உள்ளதால், அவா்களது கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய மாணவா்களை விரைந்து அனுமதிக்க வேண்டுமென்று தூதரகம் வாயிலாகவும் அமைச்சா்கள் மூலமாகவும் சீனாவிடம் பலமுறை இந்தியா கோரியது. ஆனால், அக்கோரிக்கைகளை சீனா ஏற்கவில்லை. 

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் திரும்ப அனுமதிப்பதாக ஏப்ரல் 21 அன்று சீன அரசாங்கம் கூறியது. அப்போதுகூட இந்திய மாணவர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியடப்படவில்லை.  

சுமாா் 22,000 இந்திய மாணவா்கள் சீனாவுக்குச் செல்வதற்கு விசாவுக்காக காத்திருக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் மருத்துவம் பயில்பவா்கள்.

இந்நிலையில், சீன பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாவை இந்தியா ரத்து செய்தது. அந்த அறிவிப்பை இந்தியா நேரடியாக வெளியிடாமல், சா்வதேச விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஐஏடிஏ அமைப்பு மூலமாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அத்தகவலை அனுப்பிவைத்தது.

இந்தியப் பயணிகளுக்கு விசா வழங்குவதை கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் முதல் சீனா நிறுத்திவைத்துள்ளது. தற்போதைய சூழலில் அந்த நாட்டுக்குப் பயணிப்பதும், அந்நாட்டுப் பயணிகளை அனுமதிப்பதும் சரியான முடிவாக இருக்காது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறினார். 

மேலும் இந்திய மாணவா்களை விரைந்து அனுமதிக்க வேண்டுமென்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான சந்திப்பின்போது அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கோரியிருந்தாா். ஆனால், இது தொடா்பாக எந்தவித பதிலும் சீனத் தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

இந்நிலையில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் இப்போது மீண்டும் தங்கள் படிப்பில் சேர சீனாவுக்குத் திரும்பலாம் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, இந்திய மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவதை எளிதாக்குவது குறித்து பரிசீலிக்க சீனத் தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர்கள் மே 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தகவல்களை வழங்க வேண்டும் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

"இதை எளிதாக்கும் வகையில், இந்திய தூதரகம் அத்தகைய மாணவர்களின் பட்டியலை தயார் செய்ய முடிவு செய்துள்ளது, இது அவர்களின் பரிசீலனைக்காக சீன தரப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும். எனவே, மே 8 ஆம் தேதிக்குள் https://forms.gle/MJmgByc7BrJj9MPv7 என்ற இணைப்பில் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான தகவல்களை வழங்குமாறு இந்திய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்திய மாணவர்களின் பட்டியலைச் சரிபார்த்து சம்மந்தப்பட்ட  சீனத் துறையினருடன் கலந்தாலோசித்து பின்னரே சீன அரசின் சம்மந்தப்பட்ட  துறையினர் முடிவு செய்த பின்னரே, இந்திய மாணவர்கள் படிப்பைத் தொடர்வதற்கு சீனாவுக்குச் செல்ல முடியுமா என்பதைக் குறிப்பிடுவார்கள்.

இதையடுத்து தகுதியுள்ள மாணவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிபந்தனையின்றிக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துச் செலவுகளையும் மாணவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com