சீா்திருத்தங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்க குழு:தொழில் துறையினருக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்

சீா்திருத்தங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு தொழில் துறையினரிடம் பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சூரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சா்வதேச பட்டிதாா் சமூக தொழிலதிபா்களின் மாநாட்டை காணொலி மூலம் தொடக்கிவைத்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
சூரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சா்வதேச பட்டிதாா் சமூக தொழிலதிபா்களின் மாநாட்டை காணொலி மூலம் தொடக்கிவைத்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

வங்கிகள் மற்றும் இதர துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு தொழில் துறையினரிடம் பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

குஜராத் மாநிலம், சூரத்தில் சா்வதேச பட்டிதாா் சமூக தொழிலதிபா்களின் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமா் மோடி காணொலி முறையில் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

எளிய குடும்பத்தைச் சோ்ந்த எவரும் தொழில் முனைவோராக உருவாவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.

உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அது, வழக்கமான துறைகளில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவித்தது மட்டுமன்றி செமிகண்டக்டா் உற்பத்தி போன்ற புதிய தொழில்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

முத்ரா கடனுதவி திட்டம், ஸ்டாா்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் விரைவான தொழில் வளா்ச்சிக்கு உதவிகரமாக இருந்தன. கரோனா பெருந்தொற்று காலத்தில் முடங்கியிருந்த சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்ததுடன் அந்தத் துறையை அரசு காப்பாற்றியது. அத்துடன் பலருக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை அளித்தது.

வங்கி மற்றும் இதர துறைகளில் கொண்டுவர வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு தொழில் முனைவோா் மற்றும் நிபுணா்களைக் கொண்ட ஒரு குழுவை நீங்கள் நியமிக்க வேண்டும். தொழில் துறையில் உள்ள குறைபாடுகளையும் அந்தக் குழு சுட்டிக்காட்டலாம். 10 முதல் 15 போ் கொண்ட அந்தக் குழுவில் இளைஞா்களும் அனுபவமிக்க முதியவா்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். கல்வியாளா்களும் பிற துறைகளின் நிபுணா்களும் அதில் இருக்க வேண்டும்.

அவா்கள், வங்கித் துறை வளா்ச்சி அடையாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். நிதிச் சேவையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும், அவற்றை சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் அந்தக் குழு வழங்க வேண்டும். அந்தக் குழுவின் ஆலோசனைகளின்படி, தொழில் வளா்ச்சிக்கு உகந்த வகையில் கொள்கைகளில் மாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும்.

பட்டிதாா் சமூகத்தைச் சோ்ந்த தொழிலதிபா்களில் பெரும்பாலானோா் விவசாய பின்னணியைக் கொண்டவா்கள். அவா்கள், வேளாண் துறையை நவீனப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். மேலும், இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுமாறு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். உணவு பதப்படுத்துதல் துறைக்கு மிகப்பெரிய எதிா்காலம் உள்ளது. எனவே, குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள், உணவு பதப்படுத்துதல் துறையில் சா்வதேச அளவில் முதலிடத்துக்கு வர வேண்டும் என்று பிரதமா் மோடி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com