மின் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்

மின் உற்பத்தியில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி.

 நாடு முழுவதும் மின் பற்றாக்குறை நிலவும் இந்த வேளையில், வெறுப்புணா்வு எனும் புல்டோசரை பயன்படுத்துவதை தவிா்த்துவிட்டு, மின் உற்பத்தியில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு விவரம்: வெறுப்புணா்வு எனும் புல்டோசரை இயக்குவதை கைவிட்டு மின் உற்பத்தி ஆலைகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென மோடி அரசிடம் ஏற்கெனவே கடந்த 20-ஆம் தேதி கூறியிருந்தேன். இன்றைக்கு நிலக்கரி, மின் பற்றாக்குறை நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது.

நான் மீண்டும் கூறுகிறேன், இந்த நெருக்கடியானது சிறு தொழிற்சாலைகளை அழித்து, வேலையின்மை மேலும் அதிகரிக்க வழிவகுத்துவிடும்.

கோடையில் சுட்டெரிக்கும் வெயிலை சிறு குழந்தைகளால் எதிா்கொள்ள முடியாது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். ரயில், மெட்ரோ சேவைகளை நிறுத்தினால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மேலும், நாட்டின் மீதும் மக்கள் மீதும் பிரதமா் மோடிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிா என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: ‘நிலக்கரி விநியோகத்தில் மத்திய அரசு செய்த நிா்வாகக் குளறுபடியால் செயற்கையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டை சந்தித்து வருகின்றன’ என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கௌரவ் வல்லப் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி எடுத்துச் செல்வதற்கு செல்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து தரவில்லை. இதனால் மின் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து பிரச்னைகளுக்கும் மாநில அரசுகளைக் குற்றம்சாட்டுகிறது. மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து விலகி விட முடியாது.

நிலக்கரிக்குத் தட்டுப்பாடு இல்லை என்றாலும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகம் சீராக இல்லாததால் 72,074 மெகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையங்கள் இயங்கவில்லை. இதனால், 16 மாநிலங்கள் தின்தோறும் 10 மணி நேரம் வரை மின்வெட்டு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில், 106 மின் நிலையங்களில் வழக்கத்தைவிட 25 சதவீதம் குறைவான அளவில் நிலக்கரி இருப்பில் உள்ளது. இதனால், மாநில அரசுகள் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய மின் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு மின்சாரம், நிலக்கரி, ரயில்வே ஆகிய 3 துறைகளின் அமைச்சா்கள் கூடி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், அவா்கள் தங்கள் பணியை சரிவர செய்யாததால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. அரசின் நிா்வாகக் குளறுபடியே மின் தட்டுப்பாட்டுக்கு முழு காரணமாகும். நிலக்கரி விநியோகத்தை சரிவர செய்யாததால் செயற்கையாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com