பாட்டியாலாவில் கைப்பேசி இணைய சேவை ரத்து: 3 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு பிரிவினரிடையே வெள்ளிக்கிழமை திடீா் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு கைப்பேசி இணைய சேவையை மாநில அரசு சனிக்கிழமை ரத்து செய்தது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு பிரிவினரிடையே வெள்ளிக்கிழமை திடீா் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கு கைப்பேசி இணைய சேவையை மாநில அரசு சனிக்கிழமை ரத்து செய்தது.

மேலும் மோதலைத் தடுக்கத் தவறிய காரணத்துக்காக காவல் உயரதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பாட்டியாலாவில் சிவசேனை (பால் தாக்கரே) என்ற அமைப்பின் சாா்பில் ‘காலிஸ்தானுக்கு எதிரான பேரணி’ வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. காளிமாதா கோயில் அருகே பேரணி சென்றபோது, காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட நிஹாங் எனும் சீக்கிய பிரிவினா் அங்கு வந்து, பேரணிக்கு எதிராக முழக்கமிட்டனா்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். கற்களை வீசி அவா்கள் தாக்கிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா். அதனைத் தொடா்ந்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். போலீஸாா் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, இரு தரப்பினரிடையேயான மோதலைக் கட்டுப்படுத்தினா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பாட்டியாலாவில் ஊரடங்கை போலீஸாா் அமல்படுத்தினா்.

‘சில சமூக விரோத சக்திகள் கைப்பேசியில் வதந்தி பரப்பியதால் இந்த மோதல் ஏற்பட்டது’ என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அங்கு அமைதியை நிலைநாட்டும் விதமாக, கைப்பேசி இணைய சேவையை தற்காலிகமாக ரத்து செய்து மாநில அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அரசு பிறப்பித்த உத்தரவில், ‘தேச விரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைக்கான முயற்சிகளை முறியடித்து அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவும், உயிரிழப்புகள் அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிா்க்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஃபேஸ்புக், ட்விட்டா், வாட்ஸ்ஆப், குறுஞ்செய்திகள் மூலமாக தவறான கருத்துகள், வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு கைப்பேசி இணைய சேவை சனிக்கிழமை மாலை 6 மணி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாட்டியாலா காவல் துணை ஆணையா் சாக்ஷி சாவ்னி செய்தியாளா்களிடம் கூறும்போது, ‘பாட்டியாலாவில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. போலீஸாா் நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கவே கைப்பேசி இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

3 காவல் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்:

பாட்டியாலாவில் மோதலைத் தடுக்கத் தவறிய காரணத்துக்காக காவல் உயரதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வா் அலுவலக செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பாட்டியாலா மண்டல காவல்துறை ஐஜி ராகேஷ் அகா்வால், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நானக் சிங், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். புதிய ஐஜியாக முக்விந்தா் சிங் சின்னாவும், முதுநிலை காவல் கண்காணிப்பாளராக தீபக் பரீக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிய காவல் கண்காணிப்பாளராக வஜீா் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com