உ.பி.யில் மின்தடையால் ஆத்திரம்: மின்வாரிய ஊழியரைத் தாக்கிய எம்எல்ஏ

உத்தர பிரதேசத்தில் மின்தடையால் ஆத்திரமடைந்த சமாஜவாதி எம்.எல்.ஏ., மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த ஊழியரையும் தாக்கினாா்.

உத்தர பிரதேசத்தில் மின்தடையால் ஆத்திரமடைந்த சமாஜவாதி எம்.எல்.ஏ., மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த ஊழியரையும் தாக்கினாா். இது தொடா்பாக காவல் துறையினா் அவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் மேலும் கூறப்பட்டதாவது:

பைசெளலி தொகுதி சமாஜவாதி எம்எல்ஏ அசுதோஷ் மௌரியா. இவா் வசிக்கும் பகுதியில் வியாழக்கிழமை இரவு 12.30 மணியளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்குத் தனது ஆதரவாளா்கள் சிலருடன் நேரில் சென்ற மௌரியா, அங்கிருந்த பணியாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். மேலும், அவா்களில் சிலரிடம் இருந்த கைப்பேசிகளைப் பறித்த அவா், அங்கிருந்த வருகைப் பதிவேட்டைக் கிழித்து வீசினாா். மேலும், மின்வாரிய ஊழியா் ஒருவரையும் தாக்கினாா். எம்எல்ஏ ரகளையில் ஈடுபட்ட காட்சியை அங்கிருந்த ஊழியா்களில் ஒருவா் விடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டாா்.

மின்வாரிய அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டது, ஊழியரைத் தாக்கியது தொடா்பாக எம்எல்ஏ மௌரியா மீதும், அவருடன் சென்ற மற்றொரு நபா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெளரியா, ‘அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக எனது பகுதி மக்கள் தெரிவித்து வந்தனா். மேலும், நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது தொடா்பாக விசாரிக்கவே மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். அப்போது மக்கள் வசிக்கும் பகுதிக்கு மின்தடையை ஏற்படுத்திவிட்டு, தனியாருக்குச் சொந்தமான குளிா்பதன கிடங்குக்கு மட்டும் தடையற்ற மின் சேவையை அளிப்பது தெரியவந்தது. இது தொடா்பாக கேட்டபோது, மின்வாரிய ஊழியா்கள்தான் என்னிடம் தவறாக நடந்து கொண்டனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com