தலையில் குண்டுபாய்ந்ததால் மூளைச்சாவடைந்த சிறுமி பலருக்கு வாழ்வளித்தார்

தலையில் குண்டுபாய்ந்ததில் மூளைச்சாவடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
தலையில் குண்டுபாய்ந்ததால் மூளைச்சாவடைந்த சிறுமி பலருக்கு வாழ்வளித்தார்
தலையில் குண்டுபாய்ந்ததால் மூளைச்சாவடைந்த சிறுமி பலருக்கு வாழ்வளித்தார்


புது தில்லி: தந்தையைக் கொல்ல முயன்றபோது, குறுக்கே வந்த மகளின் தலையில் குண்டுபாய்ந்ததில் மூளைச்சாவடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையத்தில், தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிகிச்சைபெற்று வந்த சிறுமி மூளைச்சாவடைந்த நிலையில் அவரது இதயம், கல்லீரல், கருவிழிகள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று, சிறுமி மூளைச்சாவடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் குறித்து உடல் உறுப்பு மீட்பு மற்றும் வங்கி அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் உறுப்பு தேவைப்படுவோரின் தகவல்கள் திரட்டப்பட்டன.

சிறுமியின் கல்லீரல், லக்னௌவைச் சேர்ந்த கல்லீரல் பாதிக்கப்பட்டு தில்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறாருக்கு பொருத்தப்பட்டது. 

இதுவரை, இந்த வயதுடைய இதயம் தேவைப்படும் நோயாளி கண்டறியப்படாததால், தேவைப்படும் நோயாளி கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதயக் குழாய்கள் பிறகு பயன்படுத்திக் கொள்ள வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுநீரகங்களும் சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. சிறுமியின் கருவிழிகள் இரண்டு குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டு கண்பார்வை கிடைக்க வழி வகை செய்யப்பட்டது.

5 வயதாகும் சிறுமி ரோலி. அவரது தந்தையை அடையாளம் தெரியாத நபர் சுட முயன்றபோது தவறுதலாக சிறுமியின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில்  ஏப்ரல் 28ஆம் தேதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது தலைக்குள் துப்பாக்கிக் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அவரது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.  தொடர் சிகிச்சை அளித்தும் அவர் மூளைச்சாவடைந்தார். சுமார் 12 மணி நேரம் அவருக்கு தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பிற்பகல் 11.40 மணிக்கு அவர் மூளைச்சாவடைந்தது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவரது பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். அதற்கு பெற்றோரும் ஒப்புக் கொண்டனர். உடனடியாக உடல் உறுப்புகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு பொருத்தும் பணி தொடங்கியது.

இது குறித்து சிறுமியின் தந்தை ஹர்நாராயணன் பிரஜாபதி கூறுகையில், முதலில் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பவில்லை. பிறகு மருத்துவர்கள் எங்களிடம் பேசினர். எங்களது மகள் இப்போது இல்லை. ஆனால் உடல் உறுப்பு தானம் மூலம் பல குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்று கண்ணீர்மல்க கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com