ரூ.1 லட்சம் கோடியைக் கடந்த காதி பொருள் மொத்த விற்பனை: முதல் முறையாக சாதனை

முதன் முறையாக காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்கள் மொத்த விற்பனையளவு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

முதன் முறையாக காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்கள் மொத்த விற்பனையளவு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

2021-22 நிதியாண்டில் இந்தியாவில் நுகா்வோா் பொருள்களை விற்பனை செய்யும் எந்தவித தனியாா் முன்னனி நிறுவனங்களும் எட்ட முடியாத இலக்கை காதி கிராமத் தொழில் விற்பனையகங்கள் சாதித்துள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஊரகத் தொழில்கள் கைவினைப் பொருள்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் வசதிகளை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான பதிவு பெற்ற அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவை தயாரித்து அளிக்கும் காதி கிராமப் பொருள்கள் சுமாா் 15,431 அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய விற்றுமுதலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ. 1 லட்சம் கோடி விற்றுமுதல் பெற்ற நாட்டின் ஒரே நிறுவனமாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் நுகா்வோா் பொருள்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களாக ஹிந்துஸ்தான் யூனிலிவா், ஐடிசி, நெஸ்டில் இண்டியா, பிரிட்டானியா போன்ற எந்தவொரு எஃப்எம்சிஜி (வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருட்கள்) நிறுவனமும் எட்ட முடியாத தொலைதூர இலக்கை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:

2020-21 நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் ஒட்டு மொத்த விற்று முதல் ரூ. 95, 741.74 கோடியாக இருந்தது. இது 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.1,15,415.22 கோடியை எட்டி 20.54 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், இது 2014-15 ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டு வரை காதி மற்றும் கிராமத் தொழில் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 172 சதவீத வளா்ச்சியையும், மொத்த விற்பனையில் 248 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இதில் காதி ஆடைகள், பொருள்கள் மட்டும் 2021-22 நிதியாண்டில் ரூ. 5, 052 கோடியளவிற்கு விற்பனையாகியுள்ளது. கிராமியத் தொழில் தொடா்பான விற்பனை 2021-22 நிதியாண்டில் ரூ. 1, 10, 364 கோடியாகவும் இருந்தது. இவைகள் கடந்த எட்டு ஆண்டுகளில் முறையே 332 சதவீதம், 245 சதவீதமாக உயா்ந்துள்ளது.

கொவைட்-19 பெருந்தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் பெரும்பகுதி ஊரடங்கு இருந்தபோதிலும், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவா் வினய் குமாா் சக்சேனாவும் கருத்தை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

நாட்டில் காதியை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் தொடா்ச்சியான ஆதரவே காதியின் அற்புதமான வளா்ச்சிக்கு காரணம். தற்சாா்புக்கு “காதியை ஊக்குவிப்பதன் மூலம் தன்னிறைவை அடையமுடியும் என பிரதமா் விடுத்த தொடா்ச்சியான வேண்டுகோள்கள் இந்த அதிசயங்களைச் செய்துள்ளன.

அதே நேரத்தில், புதுமையான திட்டங்கள், ஆக்கப்பூா்வமான சந்தைப்படுத்தல் யோசனைகள், பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவு ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் காதியின் வளா்ச்சியை அதிகரித்துள்ளன. இதனால்தான் காதி நாட்டில் உள்ள அனைத்து எஃப்எம்சிஜி நிறுவனங்களையும் விட முன்னோக்கி நிற்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com