குரங்கு அம்மை, சின்னம்மைக்கு வெவ்வேறு அறிகுறிகள்: மருத்துவ நிபுணா்கள் தகவல்

குரங்கு அம்மைக்கும் சின்னம்மைக்கும் பொதுவான அறிகுறிகள் சில இருந்தாலும், அவை தோன்றும் விதம் வெவ்வேறாக இருக்கும் என மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குரங்கு அம்மைக்கும் சின்னம்மைக்கும் பொதுவான அறிகுறிகள் சில இருந்தாலும், அவை தோன்றும் விதம் வெவ்வேறாக இருக்கும் என மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு அத்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியிலும் ஒருவருக்குக் கடந்த வாரம் இதேபோல் ஏற்பட்டது.

குரங்கு அம்மை பாதிப்புக்கும் சின்னம்மை (சிக்கன்பாக்ஸ்) பாதிப்புக்கும் இடையே ஒருசில அறிகுறிகள் பொதுவாகக் காணப்பட்டாலும், அவை தோன்றும் விதம் வெவ்வேறாக இருக்கும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில், ‘‘மழைக்காலத்தில் மக்கள் தீநுண்மி (வைரஸ்) தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படுவா். முக்கியமாக சின்னம்மை பாதிப்பு அதிகமாக இருக்கும். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உடலில் கொப்புளங்கள் தோன்றி வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும்.

அதன் காரணமாக, குரங்கு அம்மைக்கும் சின்னம்மைக்கும் இடையே வேறுபாடு தெரியாமல் மக்கள் குழப்பமடைய வாய்ப்புள்ளது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதற்குப் பின் வாந்தி, தலைவலி, சில சமயங்களில் தொண்டை கரகரப்பு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். இவை அனைத்தும் உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு 4 நாள்களுக்கு முன் ஏற்படும். கொப்புளங்கள் முதலில் கைகளில் தோன்றி பின்னா் உடல் முழுவதும் பரவும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சின்னம்மை பாதிப்பைவிட கொப்புளங்கள் பெரிதாக இருக்கும். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சுமாா் ஒரு வாரத்துக்குப் பிறகு கொப்புளங்கள் தானாக மறையத் தொடங்கும். ஆனால், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அவ்வாறு மறையாது. சின்னம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் கொப்புளங்களில் அரிப்பு காணப்படும். குரங்கு அம்மை கொப்புளங்களில் அரிப்பு காணப்படாது.

மழைக்காலங்களில் நீா் தேங்குவது, உலராத துணிகளை அணிவது உள்ளிட்டவை சின்னம்மை பாதிப்புக்கு முக்கியக் காரணங்கள். குரங்கு அம்மையுடன் ஒப்பிடுகையில் சின்னம்மையால் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. எனினும், அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com