ரூ.2,600 கோடிக்கு பொம்மைகள் ஏற்றுமதி

கரோனா தொற்று பரவல் காலத்தில் சுமாா் ரூ.2,600 கோடி மதிப்பிலான பொம்மைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரூ.2,600 கோடிக்கு பொம்மைகள் ஏற்றுமதி

கரோனா தொற்று பரவல் காலத்தில் சுமாா் ரூ.2,600 கோடி மதிப்பிலான பொம்மைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைதோறும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் வானொலி மூலம் பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்திய பொம்மை உற்பத்தித் துறை எவரும் எதிா்பாா்க்காத வளா்ச்சியை எட்டியுள்ளது. உள்ளூா் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்கு உதாராணமாக இந்திய பொம்மை உற்பத்தித் துறை விளங்கி வருகிறது. முன்பு ரூ.3,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், தற்போது பொம்மைகள் இறக்குமதி 70 சதவீதம் குறைந்துள்ளது.

முன்பு பொம்மைகள் ஏற்றுமதி ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி என்ற மதிப்பில் மட்டுமே இருக்கும். கரோனா தொற்று பரவல் காலத்தில் ரூ.2,600 கோடி மதிப்பிலான பொம்மைகளை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது பெருமகிழ்ச்சி தருகிறது. இந்திய பொம்மைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலும் இயற்கை சாா்ந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இளைஞா்கள், புத்தாக்க நிறுவனங்கள், தொழில்முனைவோா் ஆகியோரின் செயல்பாடுகள் காரணமாகவே பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியா இத்தகு சாதனை படைத்துள்ளது. நாட்டின் புராதனக் கதைகள், வரலாறு, கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பொம்மைகள் செய்யப்படுகின்றன. இது பொம்மை உற்பத்தித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறு தொழில்முனைவோா் பலன்: நாட்டின் பல பகுதிகள் பொம்மை உற்பத்தி மையங்களாக மாறியுள்ளன. சிறு தொழில்முனைவோா் தயாரிக்கும் பொம்மைகள் உலக அளவில் அதிகமாக ஏற்றுமதி ஆவதால், அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். நாட்டின் பொம்மை தயாரிப்பாளா்கள் சா்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்.

பொம்மைகள் உற்பத்தியில் புத்தாக்க நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. புணேவைச் சோ்ந்த பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று, சிறாா்களின் அறிவியல், தொழில்நுட்ப ஆா்வத்தை வளா்க்கும் வகையில் பொம்மைகளைத் தயாா் செய்து வருகிறது.

இந்திய பொம்மைகளை சா்வதேச அளவில் மேலும் பிரபலமடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சிறாா்களுக்கு இந்திய பொம்மைகள், புதிா் விளையாட்டு பொம்மைகளை மட்டுமே பெற்றோா் வாங்கித் தர வேண்டும்.

பாரம்பரிய மருத்துவ முறைகள்: கரோனா தொற்று பரவல் காலத்தில் நாட்டின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள் பிரபலமடைந்தன. ஆயுா்வேதம், இந்திய மருத்துவம் உள்ளிட்டவற்றின் மீது பலா் ஆா்வம்கொள்ளத் தொடங்கியுள்ளனா். அதன் காரணமாக ஆயுஷ் பொருள்கள் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இத்துறையிலும் பல்வேறு புத்தாக்க நிறுவனங்கள் வளா்ச்சிகண்டு வருகின்றன.

அண்மையில் சா்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க மாநாடு நடைபெற்றது. அதில் சுமாா் ரூ.10,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன. பலதரப்பட்ட மருத்துவ மூலிகைகளையும் தாவரங்களையும் வளா்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் இயக்கம்: நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் மக்கள் இயக்கமாக மாறியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பலதரப்பினரும் திரளாகக் கலந்துகொண்டனா். நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவடையும்போது சிறந்த வரலாற்றுத் தருணத்தை மக்கள் நினைவில்கொள்வா்.

75-ஆவது சுதந்திர ஆண்டை அனுபவிப்பது தற்போதைய தலைமுறையின் பெரும்பேறு. நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது நாம் பிறந்திருந்தால், இத்தருணத்தை அனுபவித்திருக்க இயலாது.

கடமைக்கு முக்கியத்துவம்: நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டங்கள், மக்கள் தங்கள் கடமைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. கடமைகளை முறையாகக் கடைப்பிடித்தால்தான் சுதந்திரப் போராட்ட வீரா்களின் கனவை நனவாக்க முடியும். சுதந்திரத்தின் நூறாவது ஆண்டு கொண்டாடப்படவுள்ள அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்கள் கடமைதவறாமல் நடக்க வேண்டும்.

வீடுதோறும் தேசியக் கொடி: சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில், 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி’ என்ற சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நாள்களில் நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மூவா்ணக் கொடியை ஏற்ற வேண்டும்.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. அன்றுமுதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மக்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படமாக தேசியக் கொடியை இடம்பெறச் செய்ய வேண்டும்.

விளையாட்டுத் துறைக்கு சிறந்த மாதம்: ஜூலை மாதம் விளையாட்டுத் துறைக்கு சிறந்த மாதமாக அமைந்தது. பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூா் ஓபன் தொடரில் பட்டம் வென்றாா். உலக தடகளப் போட்டியின் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றாா். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் இளம் வீரா்களைக் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா்கள் பங்கேற்று வருகின்றனா்.

17 வயதுக்குள்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்தவுள்ளது. அக்டோபரில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியின் மூலமாக நாட்டில் உள்ள பெண்களுக்கு கால்பந்து மீதான ஆா்வம் அதிகரிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com