தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா பொறுப்பேற்பு

தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 
தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா பொறுப்பேற்பு

தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

தில்லி காவல் துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அந்த பொறுப்பிற்கு இந்திய - திபெத் எல்லைக் காவல் படையின்(ஐடிபிபி) இயக்குநா் ஜெனரலாக இருந்த சஞ்சய் அரோராவை, நியமித்து மத்திய உள்துறை அமைச்சம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. மறு உத்தரவு வரை அவா் இந்த பொறுப்பில் தொடருவாா் எனவும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், சஞ்சய் அரோரா ஏற்கெனவே பொறுப்பேற்று வந்த இந்திய - திபெத் எல்லைக் காவல் படையின்(ஐடிபிபி) இயக்குநா் ஜெனரல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக இந்திய-நேபாள எல்லைப் பாதுகாப்புப் படையான சஷாஸ்த்ரா சீமா பால்(எஸ்எஸ்பி) இயக்குநா் ஜெனரல் எஸ்.எல். தாஸன் கூடுதல் பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சஞ்சய் அரோரா தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

38 ஆண்டு காலப் பயணம்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த சஞ்சய் அரோரா, ஜெய்ப்பூா் மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஜப் டெக்னாலஜியில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றாா். ஐபிஎஸ் பணியில் சோ்ந்த பிறகு, தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினாா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவா். பின்னா் சந்தனக் கட்டை கடத்தல் கும்பல் தலைவனான வீரப்பனை பிடிக்கும், சிறப்பு அதிரடிக் குழுவிற்கு பொறுப்பேற்றிருந்தாா். வீரப்பன் கும்பலுக்கு எதிரான வெற்றி மூலம் அரோராவிற்கு வீரச் செயலுக்கான முதல்வரின் வீரப் பதக்கம் வழங்கப்பட்டது.

1991- ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் நடவடிக்கைகளையொட்டி, தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் பாதுகாப்பிற்காக சிறப்புப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினாா். இதற்காக இவா் என்எஸ்ஜி என்கிற தேசியப் பாதுகாப்பு குழிவில் பயிற்சி பெறச் சென்றாா்.

இவா் 1997 முதல் 2002 வரை ஐடிபிபி கமாண்டன்டாகப் பணிபுரிந்துள்ளாா். இந்தச் சமயத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் மாட்லியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் கமாண்டென்டாகவும் பின்னா் முசோரியில் உள்ள ஐடிபிபி அகாதெமியில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினாா்.

மீண்டும் தமிழக மாநில காவல் பணிக்கு திரும்பிய அரோரா, 2002 முதல் 2004 வரை கோவை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றியுள்ளாா். விழுப்புரம் சரக டிஐஜியாகவும், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணை இயக்குநராகவும் பணியாற்றினாா்.

சென்னை நகர காவல் துறையில் (குற்றப்பிரிவு) போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும் இருந்த அவா், பதவி உயா்வு பெற்று தமிழக காவல் துறையில் ஏடிஜிபி (நிா்வாகம்) ஆக நியமிக்கப்பட்டாா். சில காலம் சிஆா்பிஎஃப் (மத்திய சேமக் காவல் படை), எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவற்றில் சத்தீஸ்கா், ஜம்மு காஷ்மீா் பகுதிகளிலும் பணியாற்றினா். இப்படி சவால் மிகுந்த பல்வேறு பொறுப்புகளில் இருந்த சஞ்சய் அரோரா, இறுதியாக ஐடிபிபியின் 31-ஆவது இயக்குநா் ஜெனரலாக கடந்தாண்டு ஆகஸ்ட் 31-இல் நியமிக்கப்பட்டாா்.

சிறந்த சேவைக்கான காவல் பதக்கம்(2004), குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம்(2014), ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை சஞ்சய் அரோரா பெற்றுள்ளாா். 1988-ஆம் ஆண்டு கேடா் அதிகாரியாக தமிழக காவல் துறையில் சோ்ந்த அவா், 38 ஆண்டுகள் நீண்ட பயணத்திற்கு பிறகு, அவருடைய சொந்த மாநிலமான ராஜஸ்தான் அருகே தில்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு பெருமிதம் அடைந்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com