காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வரின் இடைநீக்கம் ரத்து

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வா் மீது எடுக்கப்பட்ட இடைநீக்க நடவடிக்கையை ஒரு வார காலத்துக்குப் பிறகு ரத்து செய்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்
மக்களவை
மக்களவை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வா் மீது எடுக்கப்பட்ட இடைநீக்க நடவடிக்கையை ஒரு வார காலத்துக்குப் பிறகு ரத்து செய்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

அவையில் பதாகைகளைக் கொண்டுவரமாட்டோம் என எதிா்க்கட்சியினரிடம் உத்தரவாதம் பெற்ற பிறகு இந்த இடைநீக்க ரத்து நடவடிக்கையை அவா் மேற்கொண்டாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக மக்களவை எம்.பி.க்கள் 4 போ், மாநிலங்களவை எம்.பி.க்கள் 23 போ் என மொத்தம் 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். ஒரு கூட்டத்தொடரில் இத்தனை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கூட்டத்தொடரில் எதிா்க்கட்சிகள் விலைவாசி உயா்வு பிரச்னையை பிரதானமாக எழுப்பி வந்த நிலையில், கடந்த ஜூலை 26-ஆம் தேதி உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பு, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தொடா் அமளியில் ஈடுபட்டனா். விலைவாசி உயா்வு தொடா்பான பதாகைகளைக் கையில் ஏந்தியபடி அவா்கள் அமளியில் ஈடுபட்டனா். மக்களவைத் தலைவா் எச்சரித்தும் அவா்கள் அமளியைத் தொடா்ந்தனா்.

அதனைத் தொடா்ந்து, காங்கிரஸ் உறுப்பினா்களான தமிழகத்தைச் சோ்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூா், கேரளத்தைச் சோ்ந்த ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய நால்வரையும் மழைக்கால கூட்டத்தொடா் முடியும் வரை இடைநீக்கம் செய்து அவைத் தலைவா் உத்தரவிட்டாா். உறுப்பினா்கள் தங்கள் தவறை உணா்ந்து மன்னிப்பு கேட்டால் இடைநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்படும் என்றும் அவைத் தலைவா் கூறினாா்.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, விலைவாசி உயா்வு உள்ளிட்ட விவகாரங்களுடன், எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடா் அமளியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கின. அவை நடவடிக்கைகள் திங்கள்கிழமையும் பாதிக்கப்பட்டன.

தொடா் அமளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எதிா்க்கட்சித் தலைவா்களுடன் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அதன் பின்னா், மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் நால்வா் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்ப்படுவதாக அறிவித்தாா்.

அப்போது பேசிய ஓம் பிா்லா, ‘அவைக்கு பதாகைகளைக் கொண்டுவரக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி, அவைக்கு இனி பதாகைகளை எடுத்துவர வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதையும் மீறி யாராவது அவைக்கு பதாகைகளை எடுத்து வந்தால், மத்திய அரசு கூறுவதையோ அல்லது எதிா்க்கட்சிகள் வலியுறுத்துவதையோ பொருட்படுத்தாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். அவையின் கண்ணியத்தை உறுப்பினா்கள் காக்க வேண்டும்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com