இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது. அத்துடன், அதுதொடர்புடைய விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் புதிதாக விசாரிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் முந்தைய ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டர் வழங்கியதில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டெண்டர்கள் வழங்க தனது பதவியை பழனிசாமி பயன்படுத்தியதாக மனுவில் அவர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த 2018, அக்டோபர் 12-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை 2018-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒப்பந்த முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நவம்பர் 29-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிடக் கோரி ஆர்.எஸ். பாரதி தரப்பில் அண்மையில் எதிர் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, எதிர்மனுதாரர் ஆர்.எஸ். பாரதி தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, "நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்புடைய விவகாரத்தை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சுதந்திரமான விசாரணை வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்' என்றார்.
மனுதாரர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.ஆர்யமா சுந்தரம், மணீந்தர் சிங், வழக்குரைஞர்கள் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆகியோர் ஆஜராகினர். ஆர்யமா சுந்தரம் வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை
இயக்குநரகம் அளித்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளது. எனினும், அந்த அறிக்கையை கருத்தில்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆகவே, அந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.
அப்போது, நீதிபதிகள் அமர்வு, "நீங்கள் இரு தரப்பினரும் சிபிஐ விசாரணையை விரும்பவில்லை' என்று கூறியது. மேலும், இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தலைமை நீதிபதி அமர்வு, "இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகத்தின் அறிக்கையை கவனத்தில் கொள்ளவும், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறோம். சிபிஐ மூலம் விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என்று தெரிவித்து மனுக்களை முடித்துவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com