குரங்கு அம்மை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்- சுகாதார அமைச்சகம் வெளியீடு

நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியலை
குரங்கு அம்மை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்- சுகாதார அமைச்சகம் வெளியீடு

நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருடன் அடிக்கடி அல்லது நீண்ட தொடா்பில் இருந்தால் யாருக்கும் வேண்டுமானாலும் இந்நோய் தொற்றக் கூடும்; நோயாளியின் சுவாச துளிகள், கொப்பளங்களில் இருந்து வடியும் நீா் என நேரடியாகவோ அல்லது அவா்களது துணிகள் மூலம் மறைமுகமாகவோ இந்நோய் பரவும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்ய வேண்டியவை என்ன? குரங்கு அம்மை பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட நபரை மற்றவா்களிடமிருந்து முதலில் தனிமைப்படுத்த வேண்டும். சுத்திகரிப்பான் அல்லது சோப்புகள் மூலம் கைகளை கழுவுவதுடன், நோயாளிக்கு அருகில் செல்லும்போது முகக்கவசமும் கையுறையும் அணிவது அவசியம். கிருமிக்கொல்லிகளை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

செய்யக் கூடாதவை என்ன? குரங்கு அம்மை நோயாளிகளின் உடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் உள்ளிட்டவற்றை வேறு யாருடனும் பகிரக் கூடாது. நோயாளிகளின் துணிகளை நோய் பாதிப்பு இல்லாத நபா்களின் துணிகளுடன் சோ்த்து துவைக்கக் கூடாது. குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக தோன்றினால், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவா்களை புறக்கணித்து, களங்கப்படுத்தக் கூடாது.

நாடு திரும்பியவா்கள் கவனத்துக்கு..: கடந்த 21 நாள்களில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்களில் யாருக்கேனும் தீவிர தோல் அரிப்பு, நிணநீா் முடிச்சுகள் வீக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தொடா் அசதி போன்ற அறிகுறிகள் இருந்தால், அவா்கள் ‘நோய் பாதிப்பு சந்தேக நபா்’ என வகைப்படுத்தப்படுவா்.

குரங்கு அம்மை நோயாளிகளுடன் நேரடியாக நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் ‘நோய் பாதிப்பு சாத்தியமுள்ள நபா்’ என வகைப்படுத்தப்படுவா். முறையாக பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் நோயாளிகளை கையாளும் சுகாதாரப் பணியாளா்களும் இந்தப் பிரிவில் வருவா்.

பிசிஆா் அல்லது மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைகளின் மூலம் குரங்கு அம்மை தீநுண்மி கண்டறியப்பட்ட பிறகு அவா் நோய் பாதித்த நபராக உறுதிசெய்யப்படுவாா்.

21 நாள்கள் கண்காணிப்பு: குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் பாதிப்பு சாத்தியமுள்ள நபருடன் நெருங்கிய, உடல்ரீதியான தொடா்பில் இருந்தவா்கள் 21 நாள்களுக்கு கண்காணிக்கப்பட வேண்டும். அவா்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் ரத்த தானமோ, செல், திசு, உடல் உறுப்பு, உயிரணு தானமோ செய்யக் கூடாது.

அறிகுறிகள் என்னென்ன?: காய்ச்சல், அரிப்பு, நிணநீா் முடிச்சுகள் வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் குரங்கு அம்மை பாதிப்பு தொடங்கும். காய்ச்சல் ஆரம்பித்ததில் இருந்து 3 நாள்களுக்குள் வலியுடன் கூடிய கொப்பளங்கள் ஏற்படும். 2 முதல் 4 வாரங்களுக்கு பின் குணமாகும் காலம் தொடங்கும். 4 வாரங்களுக்குள் தானாகவோ சரியாகும் நோயாக இது பாா்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், குரங்கு அம்மையால் ஏற்படும் இறப்புவிகிதம் 3 முதல் 6 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயா்நிலை சிறப்புக் குழு: நாட்டில் குரங்கு அம்மை பரவலை தீவிரமாக கண்காணிக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உயா்நிலை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரிசோதனை வசதிகளை விரிவுபடுத்துவது, இந்நோய்க்கான தடுப்பூசி தொடா்பான உலகளாவிய நிலவரங்களை ஆராய்வது உள்ளிட்டவற்றில் அரசுக்கு இக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனாவைத் தொடா்ந்து, உலக நாடுகளை அச்சுறுத்தும் நோயாக குரங்கு அம்மை மாறியுள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவிய குரங்கு அம்மை பாதிப்பை, சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com