வங்கியில் நடந்த நூதன திருட்டு: ரூ.35 லட்சத்தை திருடிய சிறுவன்

வங்கிக்குள் நுழைந்த 10 வயது சிறுவன், 35 லட்சம் ரூபாய் பணக் கட்டுகள் வைக்கப்பட்டிருந்த பையை லாவகமாக தூக்கிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் நடந்த நூதன திருட்டு: சிறுவனைத் தேடும் காவல்துறை (கோப்பிலிருந்து)
எஸ்பிஐ வங்கியில் நடந்த நூதன திருட்டு: சிறுவனைத் தேடும் காவல்துறை (கோப்பிலிருந்து)


பாட்டியாலா: சண்டீகரில், வங்கிக்குள் நுழைந்த 10 வயது சிறுவன், 35 லட்சம் ரூபாய் பணக் கட்டுகள் வைக்கப்பட்டிருந்த பையை லாவகமாக தூக்கிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியாலாவில் காளி தேவி கோயில் அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை யாருமே கவனிக்கவில்லை. நல்லவேளையாக, வங்கியிலிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் அனைத்தும் பதிவாகியுள்ளது.

சிசிடிவியில் பதிவான காட்சியின் அடிப்படையில், காவல்துறை தெரிவிப்பது என்னவென்றால், சரியாக முற்பகல் 11.37 மணிக்கு ஒரு சிறுவன், வங்கிக்குள் நுழைகிறான். சிறிது நேரம் வங்கியை நோட்டமிட்டுக் கொண்டிருந்து அவன், பணம் அளிக்கும் மையத்துக்கு அருகே ஏடிஎம்மில் நிரப்ப வைக்கப்பட்டிருந்த 35 லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை எடுத்துக் கொண்டு சப்தமில்லாமல் வெளியேறுவது பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிறுவன், வேறொரு நபருடன் வங்கிக்குள் நுழைவதும், அவர்கள் சுமார் 20 நிமிடம் வங்கியின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பிறகு, ஐந்தாம் கவுண்டர் அருகே சிறுவன் வந்து நிற்கிறான். யாரும் பார்க்காத ஒரு நொடியில், அந்தப் பையை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறான். வெறும் 30 வினாடிகள்தான் அவர் அந்த கவுண்டர் அருகே நின்றிருந்தான் என்று கூறும் காவல்துறை, இது முற்றிலும் வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்தது என்று குற்றம்சாட்டுகிறார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அந்தப் பையை, வங்கியில் பாதுகாவலராக இருந்தவர் கீழே வைத்துவிட்டு அறையை பூட்டுவதற்குள் சிறுவன் திருடிச் சென்றதாக ஊழியர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து தேடுதல் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com