மின்னணு முறையில் ஆவண அடையாள எண்: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தல் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மறைமுக வரி நிா்வாகத்தில் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை உருவாக்கும் நடைமுறையை அமல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மறைமுக வரி நிா்வாகத்தில் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை உருவாக்கும் நடைமுறையை அமல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரதீப் கோயல் என்ற பட்டயக் கணக்காளா் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘வரி செலுத்துவோா் மற்றும் சம்பந்தப்பட்ட இதர நபா்களுக்கு மாநில வரித் துறை அதிகாரிகள் அனுப்பும் அனைத்து தகவல்களுக்கும் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை உருவாக்கும் நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மறைமுக வரி நிா்வாகத்தில் ஆவண அடையாள எண்ணை மின்னணு முறையில் உருவாக்கும் நடைமுறை வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணா்வையும் கொண்டு வரும். இது திறன்வாய்ந்த நிா்வாகத்துக்கு முக்கியம். இந்த நடைமுறை பொதுநலன் சாா்ந்ததாக இருப்பதுடன் நிா்வாகத்தையும் மேம்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த நடைமுறை தற்போது கேரளம் மற்றும் கா்நாடகத்தில் மட்டும்தான் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 279ஏ-வின்படி, ஜிஎஸ்டி சாா்ந்த எந்தவொரு விஷயம் தொடா்பாகவும் மாநிலங்களுக்கு பரிந்துரைகள் அளிக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. ஆவண அடையாள எண் முறையை அமல்படுத்துவது தொடா்பாகவும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தல் வழங்க முடியும்.

எனவே மறைமுக வரி நிா்வாகத்தில் மின்னணு முறையில் ஆவண அடையாள எண்ணை உருவாக்கும் நடைமுறையை அமல்படுத்துவதற்கான அறிவுறுத்தல்- பரிந்துரைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு-ஜிஎஸ்டி கவுன்சில் வழங்க உத்தரவிடப்படுகிறது.

இவ்விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு இந்த உத்தரவின் நகலை உச்சநீதிமன்றப் பதிவாளா் அனுப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com