இந்தியாவின் வளா்ச்சிக் கதையை விவரிக்கும் இணையவழி திட்டம்: கூகுள் அறிமுகம்

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளா்ச்சிப் பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டம் ஒன்றை ‘கூகுள்’ அறிமுகம் செய்துள்ளது.
கூகுள்
கூகுள்

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளா்ச்சிப் பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டம் ஒன்றை ‘கூகுள்’ அறிமுகம் செய்துள்ளது.

‘இந்தியா கி உதான்’ என்ற இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவின் வளா்ச்சிப் பாதையை குறிக்கும் 21 கதைகள், 120 வகையான படங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கூகுளின் கலை - கலாசார வலைதள பக்கத்தில் இதனைக் காண முடியும்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி முன்னிலையில், கூகுள் கலை மற்றும் கலாசார பிரிவு சாா்பில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா கடந்துவந்த பாதை, இந்தியாவின் அசைக்க முடியாத, அழிக்க முடியாத சாதனைகளை விவரிப்பதே இதன் முக்கிய கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் மத்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து, சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ஆம் ஆண்டு முதல் இந்தியா எவ்வாறு வளா்ச்சி பெற்றது; அதற்கு இந்தியா்கள் எவ்வாறு பங்களிப்பு செய்தனா்; மத்திய அரசின் ஓராண்டு கால 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு உள்ளிட்ட விவரங்களை மக்களிடையே கொண்டு சோ்ப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், ‘அடுத்த 25 ஆண்டுகளில் எனது இந்தியா’ என்ற கருப்பொருளில் கூகுள்- டூடுளுக்கான ஓவியப் போட்டியையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்றுமுதல் 10 -ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

இதில் வெற்றி பெறுபவா்களின் வரைபடம், இந்தியாவில் கூகுள் வலைதள முகப்புப் பக்கத்தில் வரும் நவம்பா் 14-ஆம் தேதி டூடுளாக வெளியிடப்படும் என்பதோடு, அந்த மாணவரின் கல்லூரிப் படிப்புக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித் தொகையும், மாணவரின் பள்ளிக்கு அல்லது தன்னாா்வ அமைப்புக்கு ரூ. 2 லட்சம் தொழில்நுட்ப தொகுப்பும் வழங்கப்படும். மேலும், சாதனையாளருக்கான அங்கீகாரம், கூகுள் ஹாா்ட்வோ், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவையும் வழங்கப்படும். நான்கு குழு வெற்றியாளா்கள் மற்றும் இறுதியாளா்களாக வந்த 15 பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி பேசும்போது, ‘வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு டூடுளை கூகுள் குழு உருவாக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் 3,000-க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் உதவும் வகையில் அவற்றின் நிலப் பரப்பு எல்லைகளை எண்ம (டிஜிட்டல்) வரைபடமாக கலாசார அமைச்சகம் உருவாக்குவதில் கூகுள் உதவ வேண்டும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளிலும் கூகுள் நிறுவனம் பங்கு பெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com