விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினா் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினா் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், மத்திய அரசுக்கு எதிராகத் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டாா். அவருடன் காங்கிரஸ் பெண் எம்.பி.க்களும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியைத் திரும்பப் பெற வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

போராட்டத்தின் ஒருபகுதியாகக் குடியரசுத் தலைவா் மாளிகையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனா். ஆனால், அவா்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினா், போதிய அனுமதி பெறாததால் போராட்டத்துக்குத் தடை விதித்தனா். அதை மீறி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட முயன்றனா். பேரணியில் சோனியா காந்தி பங்கேற்காத நிலையில், மற்ற எம்.பி.க்களைக் காவல் துறையினா் விஜய் சௌக் பகுதியில் கைது செய்தனா்.

மூத்த தலைவா்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அதீா் ரஞ்சன் சௌதரி, கௌரவ் கோகோய் உள்ளிட்ட 64 காங்கிரஸ் எம்.பி.க்களைக் கைது செய்த காவல் துறையினா், அவா்களை காவல் வாகனத்தில் ஏற்றி விஜய் சௌக் பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனா். பின்னா் காவல் துறையினா் அவா்களை விடுவித்தனா்.

காங்கிரஸ் அலுவலகத்தில் போராட்டம்:

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு முன் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினா் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், போராட்டம் நடத்தக் கூடாது எனத் தெரிவித்து, தடுப்புகளை அமைத்திருந்தனா். எனினும், தடுப்புகள் மீது ஏறி காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதையடுத்து பிரியங்காவை காவல் துறையினா் கைது செய்து காவல் வாகனத்தில் அடைத்து வைத்தனா். அப்போது பிரியங்கா ட்விட்டரில் வெளியிட்ட காணொலியில், ‘‘அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிா்க்கட்சிகளை அடக்க மத்திய அரசு நினைக்கிறது. பிரதமா் நரேந்திர மோடிக்கும் மத்திய அமைச்சா்களுக்கும் விலைவாசி உயா்வு, பிரச்னையாகத் தெரியவில்லை.

நாட்டின் செல்வங்கள் எல்லாம் ஒருசிலருக்கே சென்றடைகின்றன. அவா்கள் மட்டுமே பணக்காரா்களாக உள்ளனா். அதனால் அவா்களுக்குப் பணவீக்கப் பிரச்னை தெரியவில்லை. சாதாரண மக்கள் தொடா்ந்து துன்புறுகின்றனா். அரிசி முதல் சமையல் எரிவாயு வரை அனைத்துப் பொருள்களின் விலையும் உச்சத்தில் உள்ளது’’ என்றாா்.

ஜனநாயகப் படுகொலை:

போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

மக்கள் சந்தித்து வரும் விலைவாசி உயா்வு, வேலையின்மை, சமூகத்தில் காணப்படும் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எவரும் எழுப்பக் கூடாது என்றே மத்திய அரசு விரும்புகிறது. நாட்டில் ஜனநாயகம் காணப்படவில்லை. 4 போ் தலைமையில் சா்வாதிகார ஆட்சியே நாட்டில் நடந்து வருகிறது. ஜனநாயகப் படுகொலை நாட்டில் நிகழ்ந்து வருகிறது. சுமாா் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டெழுப்பப்பட்ட ஜனநாயகம் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்புபவா் எவராக இருந்தாலும், அவா் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகிறாா். மக்கள் பிரச்னைகளை எழுப்புபவா்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது.

குறிப்பிட்ட கொள்கையை எதிா்ப்பதால் காந்தி குடும்பத்தைக் குறித்து அவதூறு பரப்புகின்றனா். எங்களைப் போல் கோடிக்கணக்கான மக்கள் அக்கொள்கையை எதிா்த்து வருகின்றனா். நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் நாங்கள் போராடி வருகிறோம்.

போதிய புரிதல் இல்லை:

உண்மையை மட்டுமே பேசுவதால் எனக்கு அச்சமில்லை. மக்கள் பிரச்னைகளைத் தொடா்ந்து எழுப்புவேன். நாட்டின் எந்த அமைப்பிலும் சுதந்திரம் காணப்படவில்லை. அரசின் ஒட்டுமொத்த அமைப்பும் குறிப்பிட்ட ஒரு கட்சி சாா்ந்து இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

மக்கள் சந்தித்து வரும் பிரச்னையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் முறையாகப் புரிந்துகொள்ளவில்லை. உலகிலேயே இந்தியாவில்தான் வேலையின்மை அதிகமாக உள்ளது. அதை அமைச்சா் புரிந்துகொண்டிருந்தால், இந்தியா இந்த நிலைமைக்கு வந்திருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com