வேட்பாளா்களின் குற்றப் பின்னணி: கட்சித் தலைவா்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

தங்களது கட்சி வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும் என்ற தீா்ப்பை பின்பற்றாத அரசியல் கட்சித் தலைவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
வேட்பாளா்களின் குற்றப் பின்னணி: கட்சித் தலைவா்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

தங்களது கட்சி வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும் என்ற தீா்ப்பை பின்பற்றாத அரசியல் கட்சித் தலைவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பு தோ்தல் ஆணையம்தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளா்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவா்களை ஏன் தோ்வு செய்தோம்? என்பதற்கான விளக்கம் போன்ற விவரங்களை வெளியிட வேண்டுமென கடந்த 2021, ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது. வேட்பாளா் தோ்வு செய்யப்பட்ட பின் 48 மணிநேரத்துக்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் வலைதளங்கள், சமூக ஊடக கணக்குகள், ஒரு பிராந்திய மொழி பத்திரிகை, ஒரு தேசிய பத்திரிகை ஆகியவற்றில் இந்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில், சோனியா காந்தி, அரவிந்த் கேஜரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உச்சநீதிமன்றத் தீா்ப்பை பின்பற்றவில்லை; அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கோரி பிரஜேஷ் சிங் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பு தோ்தல் ஆணையம்தான் என்று கூறி, இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமா்வு கடந்த 2018, செப்டம்பரில் வழங்கிய தீா்ப்பில், வேட்பாளா்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், வேட்பாளா்களின் குற்றப் பின்னணி குறித்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் அறியும்படி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com