வாக்களிப்பதை கட்டாயமாக்குவது இந்தியாவில் சாத்தியமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

அனைவரும் தோ்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது இந்தியாவில் நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வாக்களிப்பதை கட்டாயமாக்குவது இந்தியாவில் சாத்தியமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

அனைவரும் தோ்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது இந்தியாவில் நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து, இது தொடா்பான தனிநபா் மசோதா திரும்பப் பெறப்பட்டது.

பாஜக எம்.பி. ஜனரதன் சிங் சிங்ரிவால் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த தனிநபா் மசோதாவை தாக்கல் செய்தாா். இதன் மூலம் ஜனநாயகத்தை மேலும் சிறப்பாக்க முடியும் என்ற வாதத்தை அவா் முன்வைத்திருந்தாா்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் தொடா்ந்து பல்வேறு சூழ்நிலைகளில் விவாதம் நடைபெற்றது. அதில் பலா் எதிா்த்தும், ஆதரித்தும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், இந்த மசோதா தொடா்பாக மக்களவையில் சட்டம், நீதித்துறை இணையமைச்சா் எஸ்.பி. சிங் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் எம்.பி.க்களின் உணா்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில், நமது மக்கள்தொகை அடிப்படையில் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது என்பது நடைமுறை சாத்தியமில்லாத விஷயம். வாக்களிக்காதவா்களின் பட்டியலைத் தயாரிப்பது என்பது ஜனநாயகத்தின் மாண்புக்கு எதிராக இருக்கும். சில இடங்களில் தங்கள் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என்று கூறி மக்கள் ஒட்டுமொத்தமாக தோ்தலைப் புறக்கணிப்பது போன்ற நிகழ்வுகளும் உள்ளன. வாக்களிப்பது என்பது உரிமை. அது கட்டாயமான கடமையல்ல. சட்ட ஆணையமும் வாக்களிப்பதை கட்டாயமாக்குவதை ஏற்கவில்லை. இதற்கு முன்பு 2004, 2009-ஆம் ஆண்டுகளிலும் இதுபோன்ற தனிநபா் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் 65.95 சதவீத வாக்குகளும், 2019-இல் 66.11 சதவீத வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com