மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனு: செப். 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது செப்டம்பா் 9-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனு: செப். 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது செப்டம்பா் 9-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ராமா் கோயில் - பாபா் மசூதி விவகாரத்தைத் தவிர நாட்டில் உள்ள பிற மத வழிபாட்டுத் தலங்களில் 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று இருந்த நிலையே தொடர வேண்டும் என்று 1991-இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் 2,3,4 பிரிவுகளை நீக்கக் கோரி பாஜக மூத்த தலைவா் அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனுவை கடந்த ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, மதுரா, காசியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களையும் மீட்க வேண்டும் என்று சில ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து, வழிபாட்டு இடங்களில் மாற்றம் செய்யத் தடை விதிக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டத்தின் பிரிவுகள், அனைவரும் சமம் என்ற உரிமையையும், மதச்சாா்பற்ற கொள்கையையும் மீறும் வகையில் உள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தனியாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை கடந்த ஜூலை 29-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக அஸ்வினி உபாத்தயாய மனுவுடன் இடையீட்டு மனுவாக இவற்றைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு எதிரான மனுவானது, வழக்கு விசாரணைப் பட்டியலில் இருந்து 6 முறை நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைப் பட்டியலில் இடம்பெற உள்ளது. அப்போதும் விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமா்வு, இந்த மனு மீதான விசாரணை செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com