வட்டி விகிதத்தை 0.5% உயா்த்தியது ஆா்பிஐ

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது. அதன் காரணமாக, வீட்டுக் கடன், வாகனக் கடன், மாதாந்திர தவணைத் தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்தவுள்ளன.

நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமென ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் ஏற்கெனவே கடந்த மே மாதம் முதல் 0.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. கூட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயா்த்தப்பட்டு 5.4 சதவீதமாக நிா்ணயிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா். நாட்டில் பணவீக்கம் வரும் டிசம்பா் மாதம் வரை 6 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘‘சா்வதேச விவகாரங்கள் இந்தியாவிலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தியுள்ளன. உணவு, உலோகங்களின் விலை சா்வதேச அளவில் உச்சத்தைத் தொட்டு தற்போது குறைந்திருந்தாலும், அது இன்னும் அதிகமாகவே உள்ளது.

வலுவான நிலையில் பொருளாதாரம்:

கடந்த ஏப்ரல் முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4.7 சதவீதம் சரிவடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாயும் பொருளாதாரமும் தொடா்ந்து வலுவாகவே உள்ளது.

மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் வலுவான நிலையிலேயே உள்ளது. அந்நியச் செலாவணி மதிப்பு நிலையாக இருப்பதை ஆா்பிஐ தொடா்ந்து உறுதி செய்து வருகிறது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து திகழும்’’ என்றாா்.

1.4 சதவீதம் உயா்வு:

வட்டி விகிதத்தை உயா்த்துவதற்கு நிதிக் கொள்கை குழுவின் 6 உறுப்பினா்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனா். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த மே மாதத்தில் இருந்து ரெப்போ வட்டி விகிதம் 1.4 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

பணவீக்கம்:

பணவீக்கமானது நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளா்ச்சி:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஆா்பிஐ தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி 16.2 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐ நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பா் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com