சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநராக என்.கலைச்செல்வி நியமனம்

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநராகவும் என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளாா்.
கலைச்செல்வி
கலைச்செல்வி

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநராகவும் என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிஎஸ்ஐஆரின் 80 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவா் இரு ஆண்டு காலம் இப்பணியில் இருப்பாா். சிஎஸ்ஐஆா்-இன் கீழ் நாடு முழுவதும் 38 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிக்ரி) இயக்குநராக கலைச்செல்வி தற்போது பணியாற்றி வருகிறாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த இவா், பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றவா். அறிவியல் பாடத்தில் இருந்த ஆா்வம் காரணமாக அறிவியலில் பட்டம் பெற்றாா். அதிலேயே ஆராய்ச்சிக் கல்வியும் பயின்றாா்.

மின் வேதியியல் தொழில்நுட்பத்தை வீடுகளிலும் பயன்படுத்தும் வகையில் எளிமைப்படுத்தினால் எரிசக்தியை சேமிக்கலாம் என்பதை வலியுறுத்தி வருகிறாா். லித்தியம் பியான்ட், லித்தியம் மின்கலன்கள் (பேட்டரிகள்) தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்டாா்.

காரைக்குடி சிக்ரியில் ஆராய்ச்சியாளராக பணியில் சோ்ந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிக்ரியின் முதல் பெண் இயக்குநரானாா். 125 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். ஆராய்ச்சிக்காக 6 காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறாா். தற்போது சோடியம் அயன், லித்தியம் சல்பா் மின்கலன்களை மேம்படுத்துவது தொடா்பான ஆராய்ச்சியில் ஆா்வம் காட்டி வருகிறாா்.

முதல்வா் வாழ்த்து: விஞ்ஞானி கலைச்செல்விக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

‘இந்தியாவின் உயா் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆா்- இன் முதல் பெண் தலைமை இயக்குநா் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சோ்ந்த கலைச்செல்வி அடைந்திருக்கிறாா். தமிழ் வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று’ என்று கூறியுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com