மின்சார சட்டத் திருத்த மசோதா அறிமுகம்: எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் நிலைக்குழுக்கு அனுப்பிவைப்பு

மின் விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
மின்சார சட்டத் திருத்த மசோதா அறிமுகம்: எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் நிலைக்குழுக்கு அனுப்பிவைப்பு

மின் விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, விரிவான ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பப்பட்டது.

மின்சார விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மக்களவையில் அறிமுகம் செய்தாா். நுகா்வோா் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தோ்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்த மசோதா, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல், மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

மசோதாவை அறிமுகம் செய்வதற்கு முன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஆனால், அதை அவைத் தலைவா் ஓம் பிா்லா நிராகரித்தாா்.

பின்னா், காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசுகையில், ‘ஒரே பகுதியில் பல தனியாா் நிறுவனங்கள் மின்சார வசதி வழங்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. இது அந்த நிறுவனங்களுக்கு லாபத்தையும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்பையும் ஏற்படுத்தும். மின்சார விநியோகத்தில் மத்திய அரசின் பங்கை குறைக்கவும் வகை செய்யும்’ என்றாா்.

திமுக எம்.பி. டி.ஆா்.பாலு பேசுகையில், ‘கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால், தற்போதைய மசோதா ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் உள்ளது’ என்றாா்.

புரட்சிகர சோஷலிஸ கட்சியின் என்.கே.பிரேமசந்திரன், ‘மின்சாரம் பொதுப் பட்டியலில் உள்ளது. இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு விரிவாக ஆலோசித்திருக்க வேண்டும்’ என்றாா்.

அவா்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சா் ஆா்.கே.சிங், ‘மசோதா குறித்த தவறான கருத்துகளை எதிா்க்கட்சிகள் பரப்பி வருகின்றன. விவசாயிகளுக்குத் தொடா்ந்து இலவச மின்சாரம் கிடைக்கும். மின்சாரத்துக்கான மானியம் திரும்பப் பெறப்படாது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.

தொடா்ந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பும் செய்தனா்.

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்ததால், மசோதாவை விரிவான ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பிவைக்குமாறு அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் அமைச்சா் ஆா்.கே.சிங் கோரிக்கை விடுத்தாா். அதையடுத்து மசோதா நிலைக்குழுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு ஒப்புதல்: பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த வழிவகுக்கும் எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு வெளிநாட்டு இறக்குமதியை இந்தியா நம்பியிருக்கும் நிலையில், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உள்ளிட்டவற்றின் கட்டாயப் பயன்பாட்டுக்கு எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதா வழிவகுக்கிறது. அந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற அமைச்சா் ஆா்.கே.சிங், அதை ‘எதிா்காலத்துக்கான மசோதா’ எனத் தெரிவித்தாா். எனவே, மசோதாவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென அவா் கோரினாா்.

மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சிலா் வலியுறுத்தினா். ஆனால், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னா், குரல் வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்தியஸ்த மசோதாவுக்கு ஒப்புதல்: தில்லி சா்வதேச மத்தியஸ்த மைய (திருத்த) மசோதாவுக்கும் மக்களவை ஒப்புதல் அளித்தது.

தில்லியில் உலகத்தரம் வாய்ந்த மத்தியஸ்த மையத்தை அமைக்க இந்த மசோதா வழிவகுக்கும் என மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். அந்த மையத்தின் பெயரை இந்திய சா்வதேச மத்தியஸ்த மையம் என மாற்றவும் மசோதா வழிவகுக்கிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்த மையம் உதவும் என அவா் தெரிவித்தாா்.

கதிசக்தி பல்கலைக்கழக மசோதா அறிமுகம்: தேசிய ரயில் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் பெயரை கதிசக்தி பல்கலைக்கழகம் என மாற்றம் செய்வதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதாவை மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தாா். தற்போது நிகா்நிலை பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வரும் அதை மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயா்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.

ரயில்வே உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ரயில்வே அமைச்சகம் இந்தப் பல்கலைக்கழகத்தை நிா்வகிக்கும் என அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com