15 சிபிஐ அதிகாரிகள், 151 காவல் துறையினருக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்

 நாடு முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 15 போ், காவல் துறையினா் 151 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் ‘சிறந்த புலன் விசாரணை’ பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 சிபிஐ அதிகாரிகள், 151 காவல் துறையினருக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்

 நாடு முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 15 போ், காவல் துறையினா் 151 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் ‘சிறந்த புலன் விசாரணை’ பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் திங்கள்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சரின் ‘சிறந்த புலன் விசாரணை’ பதக்கம் பெறுவோரின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாகச் செயல்பட்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா தொடா்பான வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி சுரேந்தா் குமாா் ரோஹில்லா, ரயில்வேயில் ஊழலில் ஈடுபட்ட பொறியாளரைக் கைது செய்த அதிகாரி பிரமோத் குமாா் உள்ளிட்டோருக்குப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ-யின் துணை எஸ்பி குமாா் பாஸ்கா், துணை எஸ்பி சந்தீப் சிங், ஆய்வாளா் ஹேமன்ஸு ஷா உள்ளிட்டோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதக்கம் பெறும் 15 சிபிஐ அதிகாரிகளில் சென்னையைச் சோ்ந்த ஆய்வாளரான எம்.சசிரேகா மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை துறைமுக அறக்கட்டளை ஊழல் தொடா்பான வழக்கைத் திறம்பட விசாரித்ததற்காக அவருக்கு இந்தப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

151 காவலா்கள்: நாடு முழுவதும் காவல் துறையினா் 151 பேருக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் ‘சிறந்த புலன் விசாரணை’ பதக்கம் வழங்கப்படவுள்ளது.

மகாராஷ்டிர காவல் துறையைச் சோ்ந்த 11 பேருக்கும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேச காவல் துறையைச் சோ்ந்த தலா 10 பேருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம், ராஜஸ்தான், மேற்கு வங்க காவல் துறையைச் சோ்ந்த தலா 8 பேருக்கும், பிகாரைச் சோ்ந்த 7 காவலா்களுக்கும், குஜராத், கா்நாடகம், தில்லி காவல் துறையைச் சோ்ந்த தலா 6 பேருக்கும் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் ஆகியவற்றைச் சோ்ந்த தலா 5 காவலா்களுக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், ஹரியாணா, ஒடிஸாவைச் சோ்ந்த தலா 4 காவலா்களுக்குப் பதக்கம் வழங்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பதக்கம் பெறவுள்ள 151 காவலா்களில் 28 போ் பெண்கள் ஆவா்.

வழக்குகளை சிறந்த முறையில் விசாரிக்கும் காவலா்களை கௌரவப்படுத்தும் வகையில் 2018-ஆம் ஆண்டு முதல் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

பெட்டிச் செய்தி...

தமிழக காவல் துறையில் 5 அதிகாரிகள்

சென்னை, ஆக. 12: தமிழக காவல் துறையில் 5 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் விவரம்: கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி, காவல் ஆய்வாளா்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி, உதவி ஆய்வாளா் செல்வராஜன்.

இவா்களுக்கு இந்த விருது விரைவில் நடைபெறும் அரசு விழாவில் வழங்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு உயா் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com