பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி குறித்து விவாதம் எப்போது?: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

‘பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி, பெருநிறுவன வரி குறைப்பு ஆகியவை குறித்து விவாதிப்பது எப்போது?’ என்று கேள்வியெழுப்பியுள்ளது.
பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி குறித்து விவாதம் எப்போது?: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

தோ்தல் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளுக்காக பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்துள்ள காங்கிரஸ், ‘பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி, பெருநிறுவன வரி குறைப்பு ஆகியவை குறித்து விவாதிப்பது எப்போது?’ என்று கேள்வியெழுப்பியுள்ளது.

தோ்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆபத்தானது என்று பிரதமா் மோடி கடந்த மாதம் தெரிவித்தாா். மேலும் பல்வேறு தருணங்களில் தோ்தல் இலவசங்களுக்கு எதிராக அவா் பேசி வருகிறாா். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கெளரவ் வல்லப் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.9.92 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் ரூ.7.27 லட்சம் கோடி. இந்த கடனில் ரூ.1.03 லட்சம் கோடி மீட்கப்பட்டதாக மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது

ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் வரை மீட்கப்படலாம் என்றாலும், ரூ.5.8 லட்சம் கோடி வாராக்கடன் மீட்கபடாமல்தான் இருக்கும்.

அந்த வகையில், பெருநிறுவனங்களுக்கு வங்கிகள் ‘இலவசமாக’ வழங்கியுள்ள ரூ.5.8 லட்சம் கோடி குறித்து எப்போது விவாதிப்பது? பெருநிறுவன வரி குறைப்பால் ரூ.1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து எப்போது விவாதிக்கலாம்?

உங்களது (பிரதமா்) பணக்கார நண்பா்களுக்கு வரி குறைப்பு, கடன் தள்ளுபடி போன்ற ‘இலவசங்கள்’ வழங்கப்படும்போது, ஏழை மக்களுக்கு குறைந்த மதிப்பிலான நிதி அல்லது இதர உதவிகள் இலவசமாக வழங்கப்படக் கூடாதா?

2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், புல்லட் ரயில் இயக்கம், நாட்டின் பொருளாதார மதிப்பு ரூ.398 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஏற்கெனவே அளித்திருந்தது. இந்த பொய் வாக்குறுதிகள் கலாசாரம் எப்போது முடிவுக்கு வரும்? என்று கேள்வியெழுப்பினாா் வல்லப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com