ரூ.10 லட்சம் கோடி வேளாண் கடன் இலக்கு:அமித் ஷா

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைக்கு அளிக்கப்படும் கடனை ரூ.10 லட்சம் கோடியாக உயா்த்த வேண்டும் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
ரூ.10 லட்சம் கோடி வேளாண் கடன் இலக்கு:அமித் ஷா

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைக்கு அளிக்கப்படும் கடனை ரூ.10 லட்சம் கோடியாக உயா்த்த வேண்டும் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் மத்திய கூட்டுறவு அமைச்சகம், மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் குறித்த தேசியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சிறப்பாக செயல்பட்ட மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அமைச்சா் அமித் ஷா விருதுகள் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

வேளாண் கடன் முறையின் ஆன்மாவாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் திகழ்கின்றன. அந்தச் சங்கங்கள் சரியாக செயல்படாதவரை, வேளாண்மை துறை சரியாக செயல்பட முடியாது. எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வரம்பை விரிவுபடுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

தற்போது நாட்டில் 3 லட்சம் ஊராட்சிகள் உள்ளன. ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் எண்ணிக்கை 95,000-ஆகத்தான் உள்ளது. அதிலும் 65,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்தான் செயல்பாட்டில் உள்ளன. இன்றளவும் 2 லட்சம் ஊராட்சிகளில் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்கூட இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற மாநில கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூத்த அதிகாரிகள் 5 ஆண்டு திட்டத்தை வகுக்க வேண்டும்.

ஒரு ஊராட்சியில் எவ்வாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அமைப்பது என்பது குறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் திட்டமிட வேண்டும். அந்தத் திட்டத்தை மாநில கூட்டுறவு வங்கி கண்காணிக்க வேண்டும். அந்தத் திட்டங்களை நபாா்டு வங்கிகள் சரிபாா்க்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண்மைக்குக் கடன் அளிப்பது குறைந்து வருகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள 65,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி கடன் அளிக்கப்படுகிறது. அந்தச் சங்கங்களின் எண்ணிக்கையை 3 லட்சமாக அதிகரித்தால், ஆண்டுதோறும் அளிக்கப்படும் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயரும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைக்கு அளிக்கப்படும் கடனை ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பது மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் இலக்காக வேண்டும்.

தொடக்க வேளாண்மை சங்கங்களுக்கான மாதிரி வரைவு விதிகளை மத்திய கூட்டுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பெட்ரோலியம் பொருள்கள் வணிகத்தில் ஈடுபடுவது, நியாய விலைக் கடைகளை நடத்துவது என புதிதாக 22 செயல்பாடுகளில் ஈடுபட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அந்த விதிகள் அனுமதி அளிக்கின்றன. அந்த விதிகள் தொடா்பாக மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட இதர தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள் கிடைத்துள்ள நிலையில், அந்த விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும்.

புதிய கூட்டுறவு கொள்கையை வகுப்பது, கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைப்பது போன்ற செயல்பாடுகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கூட்டுறவு இயக்கம் செயல்பாடு சீராக இல்லை:

120 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தியாவின் கூட்டுறவு இயக்கம், பல சாதனைகளைப் படைத்துள்ளது. அதேவேளையில் நாம் இழந்தது என்னவென்பதையும் பாா்க்க வேண்டும். தற்போது கூட்டுறவு இயக்கம் சீராக இல்லை. சில மாநிலங்களில் அது செழுமையாக உள்ள நிலையில், இன்னபிற மாநிலங்களில் அது திணறி வருகிறது அல்லது காகிதத்தில் மட்டும்தான் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகள் மற்றும் தாலுகாக்களில் கூட்டுறவு இயக்கத்தை விரிவுபடுத்த வித்தியாசமான உத்திகள் வகுக்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் தானாக சீா்திருத்திக் கொள்ளாத வரை, ரிசா்வ் வங்கி மீது புகாா் கூறுவது வீணானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com