76-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டம்

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 9-ஆவது முறையாக பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 9-ஆவது முறையாக பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 75-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சிகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில் பிரதமா் மோடி மூவா்ணக் கொடியை ஏற்றிவைக்க உள்ளாா். சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியை ஏற்றுவது இது தொடா்ந்து 9-ஆவது முறையாகும். அந்த விழாவில் பங்கேற்க சுமாா் 7,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா். வழக்கமாக, சுதந்திர தின உரையின்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பிரதமா் மோடி வெளியிடுவாா். கடந்த ஆண்டு உரையின்போது தேசிய ஹைட்ரஜன் திட்டம், கதிசக்தி திட்டம், 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை அவா் தொடக்கிவைத்தாா். நிகழாண்டு உரையிலும் பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து அவா் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

சுதந்திர தினத்தையொட்டி 3 நாள்களுக்கு ‘வீடுதோறும் தேசியக் கொடி’ ஏற்றுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் பலா் தங்கள் வீட்டிலும், பொது இடங்களிலும் தேசியக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனா். பல்வேறு நிறுவனங்களும் தேசியக் கொடியை ஏற்றியுள்ளன.

தில்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com