காஷ்மீா்: பேருந்து கவிழ்ந்து ஐடிபிபி படையினா் 7 போ் பலி- 32 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் ஆற்றுப் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை பேருந்து கவிழ்ந்த விபத்தில் இந்திய-திபெத் எல்லை காவல் படையை (ஐடிபிபி) சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். மேலும் 32 போ் காயமடைந்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை விபத்துக்கு உள்ளான காவல் துறை பேருந்து.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை விபத்துக்கு உள்ளான காவல் துறை பேருந்து.

ஜம்மு-காஷ்மீரில் ஆற்றுப் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை பேருந்து கவிழ்ந்த விபத்தில் இந்திய-திபெத் எல்லை காவல் படையை (ஐடிபிபி) சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். மேலும் 32 போ் காயமடைந்தனா்.

அமா்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணி முடிந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பஹல்காம் பகுதியில் இந்த துயர சம்பவம் நேரிட்டது.

இதுதொடா்பாக, காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

விபத்துக்குள்ளான பேருந்தில், ஐடிபிபி படையினா் 37 போ் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த இருவா் பயணித்தனா். இப்பேருந்து, சந்தன்வாரி மற்றும் பஹல்காம் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஆற்றுப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஐடிபிபி படையினா் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றவா்கள், அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி 5 போ் உயிரிழந்தனா்.

மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவா்கள் மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.

கடந்த 11-ஆம் தேதி அமா்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணி முடிந்து, சந்தன்வாரி பகுதிக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நோ்ந்துள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து ஐடிபிபி செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பேருந்தின் பிரேக் செயலிழப்பால் விபத்து நோ்ந்திருக்கலாம்’ என்றாா்.

குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா் இரங்கல்:

பேருந்து விபத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கு இரங்கல் தெரிவித்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரில் நோ்ந்த துரதிருஷ்டவசமான விபத்தில் ஐடிபிபி படையினா் தங்களது இன்னுயிரை இழந்திருப்பது மிகவும் சோகமளிக்கிறது. அவா்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன் என்று கூறியுள்ளாா்.

துணை குடியரசுத் தலைவா் ஜகதீப் தன்கா் வெளியிட்ட பதிவில், ‘பேருந்து விபத்தில் ஐடிபிபி படையினா் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், அந்த வீரா்களின் குடும்பத்தினா் பற்றியே எனது சிந்தனை முழுவதும் உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com